கர்நாடகாவில் இட ஒதுக்கீட்டை அதிகரித்தும் 51 எஸ்சி., எஸ்டி தொகுதியில் 39-ல் தோல்வியடைந்த பாஜக

By செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடகாவில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்காக 51 சட்டப்பேரவைத் தொகுதிகள் (தனி) ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் கடந்த 2018 தேர்தலில் 16 எஸ்.சி. தொகுதிகள், 6 எஸ்.டி. தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. 2023 பேரவைத் தேர்தலில் கூடுதல் தனித் தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என பாஜக திட்டமிட்டது.

இதற்காக தேர்தல் நடைபெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பு, எஸ்.சி. பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை 15-லிருந்து 17% ஆகவும் எஸ்.டி. பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை 3-லிருந்து 7 சதவீதமாகவும் பாஜக அரசு அதிகரித்தது. ஆனாலும், இந்தத் தேர்தலில் மொத்தம் உள்ள 51 தனித் தொகுதிகளில் 12 எஸ்.சி. தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. ஒரு எஸ்.டி.தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. 39 தனித் தொகுதிகளில் தோல்வி அடைந்தது.

இந்தத் தேர்தலில் 21 எஸ்.சி. தொகுதிகள் மற்றும் 14 எஸ்.டி. தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 4 தனி தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில சமூக நீதி பிரிவின் தலைவர் சி.எஸ்.துவாரகநாத் கூறும்போது, “இட ஒதுக்கீட்டைஅதிகரிப்பதன் மூலம் பட்டியலினத்தவர்களின் வாக்காளர்களை தங்கள் பக்கம் இழுக்க முடியும் என்ற பாஜகவின் நோக்கம் தோல்வி அடைந்துவிட்டது.

பாஜக மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதே இதற்குக் காரணம். இட ஒதுக்கீட்டை அதிகரிப்பது அல்லது குறைப்பது என்பது நீண்ட ஆய்வுக்குப் பின் மேற்கொள்ள வேண்டிய நடைமுறை. இத்தகைய முடிவுக்கு ஆதரவாக அறிவியல் பூர்வமான தரவுகள் இருக்க வேண்டும். ஆனால் பாஜக அரசு எவ்வித தரவுகளும் இல்லாமல் அவசர அவசரமாக இட ஒதுக்கீட்டை அதிகரித்தது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE