வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் பெண் வேட்பாளர் 16 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி

By இரா.வினோத்


பெங்களூரு: கர்நாடக சட்டப் பேரவை தேர்தலில் முதலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட‌ காங்கிரஸ் பெண் வேட்பாளர், மறு எண்ணிக்கையில் 16 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் கண்ணீர் விட்டு அழுதார்.

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் ஜெயநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சவும்யா ரெட்டிக்கும், அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ராமமூர்த்திக்கும் இடையே வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே கடும் போட்டி நிலவியது. இறுதி சுற்றின் முடிவில் பாஜக வேட்பாளர் ராமமூர்த்தியை விட 160 வாக்குகள் கூடுதலாக பெற்று சவும்யா ரெட்டி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர்.

இந்நிலையில் அங்கு வந்த முன்னாள் அமைச்சர் அசோகா, பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா ஆகியோர், ‘தபாலில் பதிவாகியுள்ள 170 வாக்குகளை நிராகரித்தது ஏன்? அவற்றை மறுபடியும் எண்ண வேண்டும்' என வலியுறுத்தினர். இதற்கு காங்கிரஸார் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார், அவரது சகோதரரும் காங்கிரஸ் எம்பியுமான டி.கே.சுரேஷ், சவும்யா ரெட்டியின் தந்தையும் முன்னாள் அமைச்சருமான ராமலிங்க ரெட்டி ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர்.

இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நேற்றுமுன் தினம் இரவு 10 மணிக்கு மீண்டும் தொடங்கியது. அப்போது தொழில்நுட்ப காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்ட 170 தபால் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டன. அதில் பாஜகவுக்கு அதிக இடம் கிடைத்தது. இறுதியில் அதிகாரிகள் பாஜக வேட்பாளர் ராமமூர்த்தி 57,797 வாக்குகள்பெற்று வெற்றி பெற்றதாக அறிவித்தனர். காங்கிரஸ் வேட்பாளர் சவும்யா ரெட்டி 57,781 வாக்குகள் பெற்று, 16 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததாக தெரிவித்தன‌ர். முதலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் தோல்வி அடைந்ததாக கூறியதால் சவும்யா கண்ணீர்விட்டு அங்கிருந்து சென்றார்.

இதுகுறித்து அவரது தந்தை ராமலிங்க ரெட்டி கூறுகையில், ''பாஜக மோசடி செய்து வெற்றி பெற்றுள்ளது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போகிறோம்'' என்றார். இந்த வெற்றியின் மூலம் பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை 135 ஆக குறைந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE