முஸ்லிம்கள் எதிர்ப்பால் வெற்றி வேட்பாளரை புறக்கணித்த காங்கிரஸ் - அகண்ட சீனிவாச மூர்த்தியின் கண்ணீர் கதை

By செய்திப்பிரிவு

பெங்களூரு: முஸ்லிம்களின் எதிர்ப்பால் புலிகேசி நகர் முன்னாள் எம்எல்ஏ அகண்ட சீனிவாச மூர்த்திக்கு காங்கிரஸ் சீட் தரவில்லை.

பெங்களூரு புலிகேசி நகர் தொகுதியை சேர்ந்த அகண்ட சீனிவாச மூர்த்தி கடந்த 2013-ம்ஆண்டு மஜத சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2018-ல் அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் கட்சியில் இணைந்த அவருக்கு, அந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது அகண்ட சீனிவாச மூர்த்தி 81 ஆயிரத்து 628 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். இதன் மூலம் கர்நாடகாவிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற வேட்பாளர் என்ற பெருமையைப் பெற்றார்.

இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு அகண்ட சீனிவாச மூர்த்தியின் உறவினர் ஒருவர் நபிகள் நாயகம் குறித்து ஃபேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலானதால் புலிகேசி நகரில் உள்ள முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அகண்ட சீனிவாச மூர்த்தியின் வீடு, அவரது தம்பியின் வீடு ஆகியவற்றை முஸ்லிம்கள் தாக்கி தீயிட்டு கொளுத்தினர். தங்க நகை, ரொக்கப்பணம், கல்வி சான்றிதழ்கள் உள்ளிட்டவவை எரிந்ததில், ரூ. 70 லட்சம் அளவுக்கு இழப்பீடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி, காவல் பைரசந்திரா ஆகிய 3 காவல் நிலையங்கள் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன. இது தொடர்பான வழக்கில் காங்கிரஸ், எஸ்டி‍பிஐ ஆகிய கட்சிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்னனர்.

முஸ்லீம்கள் சீட் தர எதிர்ப்பு: முஸ்லிம்கள் மீதான வழக்கை வாபஸ் பெறுமாறு அகண்ட சீனிவாச மூர்த்தியிடம் முஸ்லிம் அமைப்பினர் கோரினர். அவர் மறுப்பு தெரிவித்ததால், முஸ்லிம் அமைப்பினர் காங்கிரஸ் மேலிடத்திடம் அகண்ட சீனிவாச மூர்த்திக்கு சீட் தரக் கூடாது என வலியுறுத்தினர். அவருக்கு சீட் கொடுத்தால் காங்கிரஸை முஸ்லிம்கள் புறக்கணிப்பார்கள் என எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.

முஸ்லிம்களின் எதிர்ப்பு காரணமாக அகண்ட சீனிவாச மூர்த்திக்கு தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சீட் வழங்கவில்லை. இதனால் கட்சியில் இருந்து விலகிய அவர், வேட்பு மனு தாக்கலுக்கு முன்பு (ஏப்ரல் 24-ம் தேதி) பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தார். அதில் போட்டியிட்ட அவர் 25,106 வாக்குகள் பெற்றார். அதேவேளையில் காங்கிரஸ் வேட்பாளர் ஏ.சி.சீனிவாஸ் 87 ஆயிரத்து 214 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

கண்ணீர் விட்டு அழுதார்: கடந்த தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற அகண்ட சீனிவாச மூர்த்தி இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் அவரது ஆதரவாளர்கள் சோகமடைந்து உள்ளனர். இதுகுறித்து அவரது ஆதரவாளர் கோவிந்தராஜ் கூறும்போது,'' நபிகள் நாயகம் தொடர்பான பதிவுக்கும் அகண்ட சீனிவாச மூர்த்திக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் அவரை கொல்ல வேண்டும் என்ற நோக்கில் வீடு கொளுத்தப்பட்டது. காங்கிரஸில் இருந்த அவரின் அரசியல் எதிரிகளே இந்த சதியில் ஈடுபட்டு கைதாகினர்.

இந்த விவகாரத்தில் வீட்டையும், சொத்தையும் இழந்த அகண்ட சீனிவாச மூர்த்திக்கு யாரும் துணை நிற்கவில்லை. முஸ்லிம்கள் செய்த கலவரம் தொடர்பாக யாரும் அவரிடம் மன்னிப்பு கேட்கவில்லை. முஸ்லிம்களின் எதிர்ப்பால் காங்கிரஸ் தலைவர்களும் அவருக்கு துணை நிற்கவில்லை. கட்சிக்கு விசுவாச‌மாக இருந்த அகண்ட சீனிவாச மூர்த்தியை தலைவர்களே ஏமாற்றிவிட்டனர். தற்போது புலிகேசி நகர் மக்களும் கைவிட்டதால் அகண்ட சீனிவாச மூர்த்தி மிகவும் மனம் உடைந்துள்ளார். தேர்தல் முடிவின்போது கண்ணீர் வீட்டு அழுததை பார்க்கும்போது எங்களால் தாங்க முடியவில்லை'' என வேதனையோடு தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE