எதிர்க்கட்சிகள் இப்போது ஒன்றிணையாவிட்டால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: எதிர்க்கட்சிகள் இப்போது ஒன்றிணையாவிட்டால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மை வெற்றியைப் பெற்றதை அடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் பாஜகாவால் பதவியில் நீடிக்க முடியாது என்று நாங்கள் தொடக்கம் முதலே கூறி வருகிறோம். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நாடு முழுவதும் ஒரு அலை வீசத் தொடங்கி இருக்கிறது. பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் அதிகாரம் முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாக மக்கள் பேசுகிறார்கள்.

இப்போது எதிர்க்கட்சிகள் ஒன்றிணையாவிட்டால் மக்கள் நம்மை மன்னிக்க மாட்டார்கள். மக்கள் எப்போதுமே ஒரு கட்சிக்கு மட்டுமே வாக்களிப்பவர்களாக இருப்பது இல்லை. அவர்களின் எண்ணம் நேரத்திற்கு நேரம் மாறும். கர்நாடகாவில் காங்கிரஸ் பெற்றுள்ள வெற்றியை ஒட்டுமொத்த நாடும் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்ட ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சிதான் உண்மையின் குறியீடாக இருக்கிறது என்பதை மக்களுக்கு எடுத்துரைத்தார். என தெரிவித்தார்.

கர்நாடகாவின் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு நடைபெற்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், காங்கிரஸ் கட்சி 136 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளது. பாஜக 65 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE