கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 36,000 தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தை கொல்கத்தா உயர் நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது.
மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2014-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு (டெட்) நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களுக்காக 2016-ம் ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 42,500 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக ஏராளமான புகார்கள் எழுந்தன. இதில் பலர் பணம் கொடுத்து ஆசிரியர் பணி நியமனங்களைப் பெற்றதாகவும் பணி நியமனம் பெற்றவர்களில் வெறும் 6,500 பேர் மட்டுமே பயிற்சி பெற்றவர்கள் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அப்போது முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினர் உட்பட பலருக்கு இந்த ஊழலில் தொடர்பிருப்பது தெரிய வந்தது. இதற்கிடையில், 2014-ம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் ஆசிரியர் பணி நியமனம் கிடைக்காத 140 பேர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ‘ரிட்’ வழக்கு தொடர்ந்தனர்.
» உத்தர பிரதேச உள்ளாட்சி தேர்தலில் அபார வெற்றி - 17 மாநகராட்சிகளும் பாஜக வசம்
» பாகிஸ்தானில் இருந்து கொச்சிக்கு கடத்திவரப்பட்ட ரூ.12,000 கோடி போதைப் பொருள் பறிமுதல்
இந்த வழக்கை கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாயா விசாரித்து நேற்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்க மாநில வரலாற்றில் இதுவரை அறியப்படாத அளவுக்கு, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு பயிற்சி பெறாத ஏராளமானோருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அப்படி ஏறக்குறைய 36,000 பேருக்கு வழங்கப்பட்ட நியமனங்கள் ரத்து செய்யப்படுகின்றன. நியமனத்தின் போதுதிறன் அறியும் தேர்வு நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. நேர்காணல் நடத்தப்பட்டதற்கான ஆதாரமோ அல்லது நியமனதாரர்களின் தகுதி குறித்தோ எந்த ஆவணமும் சமர்ப்பிக்கப்படவில்லை.
எனவே, நியமன நடைமுறைகளில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றுள்ளது தெரிகிறது. இதில் தொடக்க பள்ளிக் கல்வித் துறையின் அப்போதைய தலைவர் மாணிக் பட்டாச்சார்யா (தற்போது அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.) மற்றும் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வருகிறது. எனவே, எந்த நடைமுறைகளையும் பின்பற்றாமல், தகுதியும் இல்லாத 36,000 ஆசிரியர் நியமனங்கள் ரத்து செய்யப்படுகின்றன.
அந்த இடங்களுக்கு 3 மாதங்களுக்குள் புதிய நியமனங்களை மேற்கொள்ள வேண்டும். இதில் கடந்த 2016-ம் ஆண்டு பங்கேற்ற விண்ணப்பதாரர்கள் மட்டும் பங்கேற்க வேண்டும். புதியவர்கள் அல்லது வேறு யாரும் இடம்பெற கூடாது. கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து இப்போது வரை இடைபட்ட காலத்தில் முறையான பயிற்சி பெற்றவர்களும் இந்த நியமன நடவடிக்கையில் பங்கேற்கலாம். நியமன நடைமுறைகள், தகுதி தேர்வு, நேர்காணல் என அனைத்து நடவடிக்கைகளையும் வீடியோவாக பதிவு செய்து பத்திரமாகப் பாதுகாத்து வைக்க வேண்டும்.
தொடக்கப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் அடுத்த 4 மாதங்களுக்கு தொடக்கப் பள்ளி துணை ஆசிரியருக்கு நிகரான ஊதியத்தில் பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள். புதிய நடைமுறைக்குப் பிறகு மீண்டும் நியமிக்கப்படும் ஆசிரியர்கள், தற்போது பணி செய்யும் இடத்திலேயே தொடர்ந்து பணியில் நீடிக்கலாம். அதுவரை அவர்கள் பணப் பலன்கள் இல்லாத பணிமூப்பு பலன் பெறுவார்கள். ஒரு வேளை அவர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டால், 4 மாதங்களுக்கான முதன்மை ஆசிரியர்களின் சம்பளம் அவர்களுக்கு வழங்கப்படாது. புதிய நியமன நடைமுறையில் தேர்வு செய்யப்படாதவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
மேலும் கடந்த 2016-ம் ஆண்டு நியமனத்தில் பங்கேற்றவர்கள் இப்போது வயது வரம்பு கடந்திருந்தாலும் புதிய நியமன முறையில் பங்கேற்கலாம். இவ்வாறு நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாயா தீர்ப்பளித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
29 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago