சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகள் - உ.பி.யில் 2 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உ.பி.யில் ஸ்வர், சான்பே ஆகிய 2 தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான அப்னாதளம் வெற்றி பெற்றுள்ளது.

உ.பி.யில் ஸ்வர் தொகுதியை உள்ளடக்கிய ராம்பூர் மாவட்டம், சமாஜ்வாதி மூத்த தலைவர் ஆசம்கானின் கோட்டையாக கருதப்படுகிறது. இங்குள்ள மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி தொடர்ந்து வெற்றி பெற்று வந்தது. முஸ்லிம் வாக்காளர்களும் இங்கு அதிகம்.

இங்கு பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட அப்னாதளம் வேட்பாளர் ஷபீக் அகமது அன்சாரி வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாதி வேட்பாளர் அனுராதா சவுகான் தோல்வி அடைந்தார்.

ஸ்வர் தொகுதியில் ஆசம்கானின் மகன் அப்துல்லா ஆசம் எம்எல்ஏவாக இருந்தார். இவர் வழக்கு ஒன்றில் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றதால் எம்எல்ஏ பதவியை இழந்தார். இதனால் இங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. முன்னதாக வழக்கு ஒன்றில் ஆசம்கான் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றதால் ராம்பூர் சதார் தொகுதிக்கான எம்எல்ஏ பதவியை இழந்தார். இங்கு கடந்த டிசம்பரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார்.

இதேபோல் உ.பி.யில் மிர்சாபூர் மாவட்டத்தின் சான்பே சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் சமாஜ்வாதி சார்பில் கீர்த்தி கோலும், பாஜக கூட்டணி சார்பில் அப்னாதளம் வேட்பாளர் ரிங்கி கோலும் போட்டியிட்டனர். இதில், ரிங்கி கோல் சுமார் 6,000வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.

ஒடிசாவில் பிஜு ஜனதா தளம்: ஒடிசாவின் ஜர்ஸுகுடா சட்டப்பேரவை தொகுதி இடைதேர்தலில் ஆளும் பிஜு ஜனதா தளம் வேட்பாளர் தீபாலி தாஸ் 48,721 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் டாங்காதாஸ் திரிபாதி தோல்வி அடைந்தார்.. காங்கிரஸ் வேட்பாளர் தருண் பாண்டே வெறும் 4,496 வாக்கு பெற்றார்

மேகாலயாவில் சோயாங் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சியான ஐக்கியஜனநாயக கட்சி வெற்றி பெற்றுள்ளது. இக்கட்சியின் வேட்பாளரான சின்ஷார் குபர் ராய் லிங்டோ தாபா, தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளர் சாம்லினை 3,422 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE