கர்நாடகா தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே நிறைவேற்றப்படும் - ராகுல் காந்தி உறுதி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ‘‘கர்நாடகா தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி அளித்த அனைத்து வாக்குறுதிகளும், முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே நிறைவேற்றப்படும்’’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

கர்நாடகாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி அன்பால் வெற்றி பெற்றுள்ளது. எனது தேசிய நடை பயணத்திலேயே இந்த அன்பு கோஷம் ஒலித்தன. கர்நாடகாவில் வெறுப்பு கடைகள் மூடப்பட்டு, அன்பு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அன்பால்தான், இந்த தேர்தல் போராட்டத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. கர்நாடக மக்கள் வெற்றி பெற்றுள்ளனர். கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி.

கர்நாடக மாநிலத்துக்கு நாங்கள் 5 வாக்குறுதிகளை அளித்தோம். ஒவ்வொறு வீட்டுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் கிரக ஜோதி, இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2,000 நிதி வழங்கும் கிரக லட்சுமி, வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு 2 ஆண்டு காலத்துக்கு மாதம் ரூ.3,000, பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கும் யுவ நிதி, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு மாதம் 10 கிலோ இலவச அரிசி வழங்கும் அன்ன பாக்யா, பெண்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம் வழங்கும் சக்தி திட்டம் போன்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. இந்த வாக்குறுதிகள் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே நிறைவேற்றப்படும். அனைத்து வாக்குறுதிகளையும் நனவாக்கு வோம். இவ்வாறு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE