தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தோல்வி - 17 ஆண்டு கால நண்பர் வெற்றி

By செய்திப்பிரிவு

கர்நாடக தேர்தலில் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான சி.டி.ரவி தோல்வியடைந்தார்.

கர்நாடக தேர்தலில் பாஜக பொதுச் செயலாளர் சி.டி.ரவி, சிக்கமகளூரு தொகுதியில் 5-வது முறையாக களமிறங்கினார். அவரை எதிர்த்து 17 ஆண்டுகளாக அவரது நண்பராக இருந்த எச்.டி.தம்மையா, காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்டார்.

தம்மையா, லிங்காயத் வகுப்பை சேர்ந்தவர். இதனால் சி.டி.ரவி தன்னை கட்சியில் வளர அனுமதிக்கவில்லை என்று கூறி பாஜகவில் இருந்து விலகினார். கடந்த சில மாதங்களுக்கு முன், டி.கே.சிவகுமார் முன்னிலையில் காங்கிரஸில் சேர்ந்தார்.

ஒக்கலிகா வகுப்பை சேர்ந்த சி.டி.ரவிக்கும், லிங்காயத் வகுப்பை சேர்ந்த எச்.டி.தம்மையாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. சி.டி.ரவியை ஆதரித்து பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோரும் பிரச்சாரம் மேற்கொண்டனர். தமிழ்நாடு, கோவா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு மேலிடப் பொறுப்பாளராக சி.டி.ரவி இருப்பதால் அவரை ஆதரித்து 3 மாநிலங்களைச் சேர்ந்த பாஜக தலைவர்களும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இந்நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கையில் சிக்கமகளூர் தொகுதியில் ஆரம்பம் முதலே சி.டி.ரவி பின்னடைவைச் சந்தித்தார். இறுதியில் காங்கிரஸ் வேட்பாளர் எச்.டி.தம்மையாவை விட 5,926 வாக்குகள் குறைவாக பெற்று சி.டி.ரவி தோல்வி அடைந்தார். சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

சி.டி.ரவியின் கோட்டையாக இருந்த சிக்கமகளூருவில் காங்கிரஸின் அமோக வெற்றி, தனது நண்பரிடமே தோல்வி ஆகியவற்றால் அவர் கடும் சோகம் அடைந்துள்ளார். இதுகுறித்து சி.டி.ரவி கூறுகையில், “இது எனது தனிப்பட்ட தோல்வி. எனது கொள்கைக்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. இந்த தோல்வியில் இருந்து மீண்டு வருவேன்” என கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE