“கர்நாடகாவில் பிரதமர் மோடி தோல்வியடைந்திருக்கிறார்” - ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கர்நாடகாவில் பிரதமர் மோடி தோல்வியடைந்திருப்பதாக காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று (சனிக்கிழமை) காலை தொடங்கி நடந்து வருகின்றன. இதில் ஆட்சி அமைக்கத் தேவையான இடங்களைத் தாண்டி காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடக நிலவரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தேசிய காங்கிரஸின் தகவல் தொடர்பு பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், "இந்தத் தேர்தலில் பாஜக, இது பிரதமர் மோடி மீதான வாக்கெடுப்பு என்று கூறி பிரச்சாரம் செய்தது. இந்நிலையில் கர்நாடகாவில் இருந்துவரும் நிலவரங்கள் அங்கு காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பதையும், பிரதமர் மோடி தோல்வி அடைந்திருப்பதையும் தெளிவாகக் காட்டுகின்றன.

காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலில், உணவு பாதுகாப்பு, விலையேற்றம், விவசாயிகள் பிரச்சினை, மின்சார விநியோகம், வேலையின்மை, ஊழல் போன்ற மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையை முன்வைத்தது. ஆனால், பிரதமர் மோடியோ மக்களிடையே பிரிவினைவாதத்தை புகுத்தினார்" என்று குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடக சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கையில் இன்னும் முடிவுகள் வெளியாகாத நிலையில் 12 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி - 120 இடங்களிலும் , பாஜக - 73, மஜத - 25, மற்றவை- 6 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE