Karnataka Election Results | காங்கிரசின் வெற்றிக்காக அனுமன் கோயிலில் பிரியங்கா பிரார்த்தனை

By செய்திப்பிரிவு

சிம்லா: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசின் வெற்றிக்காக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, சிம்லாவில் உள்ள ஒரு கோயிலில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

கர்நாடக சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் உள்ள 36 மையங்களில் எண்ணப்பட்டு வருகிறது. 12 மணி நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி - 120, பாஜக - 73, மஜத - 25 இடங்களில் முன்னணியில் இருந்து வருகின்றன. தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறியபடியே, காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருவதை அடுத்து கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியினர் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்காக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கோயிலில் சிறப்பு பிரார்த்தனை செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. சிம்லாவில் உள்ள பழமையான அனுமன் கோயிலான ஜக்கு கோயிலுக்குச் சென்ற அவர் அங்கு காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் தலைவர்கள், இந்தியா மற்றும் கர்நாடகாவின் நலனுக்காக பிரியங்கா காந்தி பிரார்த்தனை செய்ததாக தெரிவித்துள்ளனர்.

பஜ்ரங் தள் அமைப்பை தடை செய்யப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அனுமனை காங்கிரஸ் கட்சி இழிவுபடுத்திவிட்டதாக பாஜக குற்றம் சாட்டி அனுமன் சாலிசாவை பாடி பிரச்சாரம் செய்தது. இந்நிலையில், தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று வரும் சூழலில் பிரியங்கா அனுமன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE