ஆதரவு கேட்டு இதுவரை யாரும் தொடர்பு கொள்ளவில்லை: ஹெச்.டி. குமாரசாமி

By செய்திப்பிரிவு

பெங்களூரு: ஆதரவு கேட்டு பாஜகவோ, காங்கிரஸ் கட்சியோ இதுவரை தன்னை தொடர்பு கொள்ளவில்லை என்று மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் ஹெச்.டி. குமாரசாமி தெரிவித்துள்ளார்.

ஹெச்.டி. குமாரசாமி பேட்டி: கர்நாடக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு சற்று முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, "தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளன. குறிப்பாக காங்கிரஸ் கட்சி பாஜகவைவிட கூடுதல் இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் கட்சி 30-32 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் களநிலவரம் தெரிந்துவிடும்.

நாங்கள் சிறிய கட்சி. எனவே, எங்களின் ஆதரவு யாருக்கும் தேவைப்படாது. அதேநேரத்தில், எங்கள் கட்சிக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆதரவு கேட்டு இதுவரை யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. இறுதி முடிவு தெரியட்டும். அதுவரை பொறுத்திருப்போம்" என தெரிவித்துள்ளார்.

காலை 8.30 மணி நிலவரம்: காலை 8.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் 66 தொகுதிகளிலும், பாஜக 62 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. மதச்சார்பற்ற ஜனதா தளம் 18 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

தேர்தல் பின்னணி: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி மாநிலம் முழுவதும் உள்ள 36 மையங்களில் காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் ஆளும் பாஜக 224, எதிர்க்கட்சியான‌ காங்கிரஸ் 223 (ஒரு தொகுதி விவசாய சங்கம்), மதச்சார்பற்ற ஜனதா தளம் 207, ஆம் ஆத்மி 217, பகுஜன் சமாஜ் 133 தொகுதிகளில் போட்டியிட்டன. 918 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 2,613 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். காலை 10 மணி முதல் முன்னிலை விவரம் வெளியாகி 2 மணிக்குள் பெரும்பாலான முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 224 தொகுதிகள் கொண்ட கர்நாடகாவில் 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE