போலி இணையதளங்களில் ஏமாறாதீர்கள் - திருப்பதி தேவஸ்தான அதிகாரி வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

திருமலை: போலி இணையதளங்களில் பக்தர்கள் ஏமாற வேண்டாம் என திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி கேட்டுக்கொண்டுள்ளார்.

திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நேற்று தொலைபேசி மூலம் பக்தர்களின் குறைகளை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி கேட்டறிந்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பதி – திருமலை இடையிலான நடைபாதைகள் மற்றும் சாலை வழிகளை சுத்தம் செய்யும் மாபெரும் நிகழ்ச்சி சனிக்கிழமை (இன்று) நடைபெற உள்ளது. இதில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.வி. ரமணா பங்கேற்கிறார். மேலும் திருப்பதி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்கின்றனர்.

திருமலையில் வரும் 14-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை ஹனுமன் ஜெயந்தி மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

திருமலையில் கோடையின் தாக்கம் அதிகமாக உள்ளது. பக்தர்களின் வருகையும் அதிகரித்துள்ளது. தற்போது ஏழுமலையானை ஸ்ரீவாணி அறக்கட்டளை கொடையாளர் தரிசனம், ரூ. 300 சிறப்பு தரிசனம், திவ்ய தரிசனம் என தினமும் 55 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இதனால் 15,000 முதல் 20,000 பக்தர்களை மட்டுமே தர்ம தரிசனத்திற்கு அனுமதிக்க இயலும்.

இதனை பக்தர்கள் புரிந்துகொண்டு திருமலைக்கு வர வேண்டும். திருப்பதியில் விஷ்ணு நிவாசம், ஸ்ரீநிவாசம், கோவிந்தராஜ சுவாமி சத்திரம் ஆகிய இடங்களில் ஆதார் அட்டை மூலம் பக்தர்கள் தர்மதரிசனத்திற்கு டோக்கன் பெறலாம். அலிபிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸில் மலையேறி வரும் பக்தர்களுக்கு திவ்ய தரிசன டோக்கன் வழங்கப்படுகிறது. 1,240-வதுபடிக்கட்டில் இந்த டோக்கன் வழங்கப்படும். தேவஸ்தான போலி இணைய தளங்களில் பக்தர்கள் ஏமாற வேண்டாம். போலி இணையதளங்களை ஐ.டி. துறை கண்காணித்து வருகிறது. இதுவரை 52 போலி இணைய தளங்களும் 13 மொபைல் செயலிகளும் தடை செய்யப்பட்டுள்ளன. யாரேனும் போலி இணையதளத்தால்பாதிக்கப்பட்டால் 155257 என்ற எண்ணில் தகவல் கொடுங்கள்.

ஏழுமலையான் கோயிலுக்குள் செல்போன் தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் செல்போனை ரகசியமாக எடுத்துவந்து, தங்க விமான கோபுரத்தை செல்போனில் வீடியோ எடுத்தது தொடர்பாக தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த ராகுல் ரெட்டி என்ற இளைஞரை திருமலை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.இவ்வாறு தர்மாரெட்டி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE