“தேர்தல் முடிவுக்கு பிந்தைய கூட்டணி குறித்து  இறுதி செய்யவில்லை” - மஜத மாநிலத் தலைவர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

பெங்களூரு: தேர்தல் முடிவு வெளியான பின்னர் காங்கிரஸ், பாஜக இரண்டில் யாருடன் கூட்டணி என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் மாநிலத் தலைவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் அக்கட்சியைச் சேர்ந்த தன்வீர் அகமது ‘முடிவெடுக்கப்பட்டுவிட்டது’ என்று கூறிய கருத்தை அவர் மறுத்துள்ளார்.

கா்நாடகா தேர்தல் களம் அதன் உச்ச கட்ட பரபரப்பில் உள்ளது. கர்நாடகாவின் 224 சட்டப்பேரைவைத் தொகுதிகளுக்கு கடந்த புதன்கிழமை (மே 10) வாக்குப்பதிவு நடந்தது. வாக்குகள் நாளை எண்ணப்பட இருக்கின்றன. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தொங்கு அரசாங்கம் அமையும் எனக் கூறியிருப்பதால், அரசியல் களம் இன்னும் பரபரப்பாகியுள்ளது.

தேர்தல் முடிவுகளுக்கு பிந்தைய கூட்டணிகள் பற்றிய கருத்துக்கள் மெல்ல கசிந்து வரும் நிலையில், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி அதிக முக்கியத்துவம் கொண்ட கட்சியாக மாறியுள்ளது. இந்த நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சார்பாக தன்வீர் அகமது தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் எங்களை தொடர்புகொண்டு வருகின்றன. யாருடன் கூட்டணி அமைக்கவேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டு விட்டது. உரிய நேரத்தில் அதை பொதுமக்களுக்கு தெரிவிப்போம்" என்று தெரிவித்திருந்தார்.

அவரது இந்தக் கருத்தினை மஜதவின் மாநிலத்தலைவர் இப்ராஹிம் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், அவர்(தன்வீர்) எங்களுடைய செய்தித் தொடர்பாளர் இல்லை. அவர் எங்கள் கட்சியின் உறுப்பினராக கூட இல்லை. கட்சியை விட்டு முன்பே வெளியேறிவிட்ட அவர் கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லை. நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. தேர்தல் முடிவுக்காக காத்திருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையில் தன்வீர் அகமதுவின் கருத்தினை காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் மறுத்துள்ளன. முன்னதாக, மஜத பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவர்கள் எந்த முடிவு வேண்டுமானாலும் எடுக்கலாம். அந்தக்கட்சியுடன் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை" என்று கர்நாடகா காங்கிரஸ் மாநிலத்தலைவர் டிகே சிவக்குமார் வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.

பாஜகவைச் சேர்ந்த ஷோபா கரந்தலாஜே வெள்ளிக்கிழமை கூறுகையில்,"எல்லா கூட்டணிகளும் நிராகரிக்கப்பட்டன. எங்கள் கட்சி தனிப்பெரும்பான்மையை எதிர்பார்க்கிறது" என்றார்.

இந்தமுறை காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெரும் என்பதில் உறுதியாக இருக்கிறது. அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜ்வாலா வெள்ளிக்கிழமை கூறுகையில்,"காங்கிரஸுக்கு வாக்களித்த 6.5 கோடி வாக்காளர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நாளை முடிவுகள் வெளியாகும் வரை காத்திருப்போம். பாஜக அதன் தோல்வியை ஒத்துக்கொண்டுள்ளது" என்று தெரிவித்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE