“21-ம் நூற்றாண்டின் தேவைகளுக்கேற்ப தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது” - பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

காந்திநகர்: "21ம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப நாடு பல புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. அந்த தேவைகளை மனதில் கொண்டே புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அகில இந்திய தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கான 29-வது மாநாடு குஜராத்தில் நடைபெற்றது.

அம்மாநாட்டில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி கூறியதாவது: "நமது கல்வி முறை மாற்றம் அடைந்து கொண்டிருக்கிறது. மாணவர்களும் ஆசிரியர்களும் மாறிக்கொண்டு இருக்கிறார்கள். மாறிவரும் இந்த காலகட்டத்தில் நாம் எவ்வாறு முன்னோக்கி போகப்போகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. ஆசிரியர்களுடன் நான் நடத்திய பல உரையாடல்கள், தேசிய அளவிலான கொள்கைகளை வகுக்க மிகவும் உதவி உள்ளது.

இந்த காலக்கட்டத்தில், புதிய தேசிய கல்விக் கொள்கையை உருவாக்குவதில் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் தங்களின் பங்களிப்பைச் செய்துள்ளனர். இன்று இந்தியாவில் 21ம் நூற்றாண்டின் தேவைக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த தேவைகளை மனதில் கொண்டு தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

முன்பு நாம் மாணவர்களை புத்தக அறிவு உள்ளவர்களாக உருவாக்கினோம். ஆனால் புதிய தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இந்த நிலை மாறிவிடும்.

என் வாழ்நாளில் நான் ஒருபோதும் ஆசிரியராக இருந்தது இல்லை. ஆனால் வாழ்நாள் முழுவதும் மாணவனாக இருந்து சமூகத்தின் நுணுக்கங்களைப் படித்திருக்கிறேன். என்னுடைய வெளிநாட்டுப் பயணங்களில் நான் சந்தித்து பேசும் தலைவர்களில் பலர் அவர்களின் ஆசிரியர்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்று தெரிவித்துள்ளனர்.

கூகுள் தரவுகளையும், தகவல்களையும் தரும். ஆனால் ஒரு ஆசிரியரால் மட்டுமே மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க முடியும். அதனால் தான் "மாற்றமடையும் கல்வியின் மையம் ஆசிரியர்கள்" என்பதே இந்த மாநாட்டின் கருப்பொருள்" இவ்வாறு பிரதமர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE