ஆளுநர், சபாநாயகர் தவறான முடிவு எடுத்துள்ளனர்; உத்தவ் தாக்கரேவை முதல்வராக நியமிக்க முடியாது: மகாராஷ்டிரா வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவை மீண்டும் முதல்வராக நியமிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. மகாராஷ்டிராவின் அப்போதைய ஆளுநரும், இப்போதைய சபாநாயகரும் தவறான முடிவு எடுத்திருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த 2019 நவம்பர் முதல் 2022 ஜூன் வரை ஆட்சி நடத்தியது. கடந்த ஆண்டு ஜூனில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்எல்ஏக்கள், உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். இதைத் தொடர்ந்து ஷிண்டே உட்பட 16 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து அப்போதைய துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால் உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஷிண்டே அணி எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர். 16 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

இந்த சூழலில் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அப்போதைய ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, உத்தவ் தாக்கரே அரசுக்கு உத்தரவிட்டார். இதற்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் உத்தவ் மனு தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்காததால், நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமல் கடந்த ஆண்டு ஜூன் 29-ம் தேதி உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதற்கு அடுத்த நாளான ஜூன் 30-ம் தேதி ஷிண்டே அணியும் பாஜகவும் இணைந்து மகாராஷ்டிராவில் புதிய அரசை அமைத்தன. ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும் பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவில் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.

ஆட்சி மாற்றம் தொடர்பாக உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி, ஹிமா கோலி, நரசிம்மா அமர்வு விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலேயே உத்தவ் தாக்கரே தாமாகவே முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இந்தசூழலில் ராஜினாமாவை ரத்து செய்து அவரை மீண்டும் முதல்வராக நியமிக்க முடியாது.

அப்போதைய ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, உத்தவ் தாக்கரே அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது தவறான முடிவு. இந்த முடிவு எடுத்ததற்கான வலுவான காரணத்தை அவர் கூறவில்லை. எனினும் உத்தவ் பதவி விலகிய பிறகு ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய அரசு அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததில் எந்த தவறும் கிடையாது. தற்போதைய சபாநாயகர் ராகுல் நாவேகர், சிவசேனாவின் கொறடாவாக ஷிண்டே அணியை சேர்ந்த பகத் கோகவலேவை அங்கீகரித்தது தவறான முடிவு.

ஷிண்டே அணியைச் சேர்ந்த 16 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது தொடர்பான வழக்கில் நபம் ரெபியா தீர்ப்பை மறு ஆய்வு செய்வதா, வேண்டாமா என்பது குறித்து 7 நீதிபதிகள் அமர்வு விசாரித்து வருகிறது. இதன் அடிப்படையில் 16 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் தொடர்பாக சபாநாயகர் முடிவு எடுக்கலாம்.

இவ்வாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.

இந்த தீர்ப்பின்படி மகாராஷ்டிராவில் தற்போது ஆட்சி நடத்தும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மும்பையில் நேற்று கூறும்போது, “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முழு திருப்தி அளிக்கிறது" என்று தெரிவித்தார். உத்தவ் தாக்கரே கூறும்போது, “தார்மிக பொறுப்பேற்று ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE