புதுடெல்லி: டெல்லி ஆளுநரைவிட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
யூனியன் பிரதேசமான டெல்லியின் சட்டம்-ஒழுங்கு மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. டெல்லியில் தற்போது முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சி நிர்வாகம் தொடர்பாக அரசுக்கும், டெல்லி துணைநிலை ஆளுநருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வந்தன.
இது தொடர்பாக 2015-ல் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு வழக்குத் தொடர்ந்தது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், 2016-ல் ஆளுநருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, ஆம் ஆத்மி அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
2019-ல் இரு நீதிபதிகள் அமர்வு, இவ்வழக்கில் மாறுபட்டத் தீர்ப்பை வழங்கியது. ஒரு நீதிபதி அரசுக்கு ஆதரவாகவும், மற்றொரு நீதிபதி துணைநிலை ஆளுநருக்கு ஆதரவாகவும் தீர்ப்பளித்தனர். இதையடுத்து, இந்த வழக்கு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டது. மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று, கடந்த ஆண்டு ஜூலை மாதம் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.
இதன்படி, தலைமை நீதிபதி சந்திர சூட், நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி, ஹிமா கோலி, நரசிம்மா அமர்வு வழக்கை விசாரித்தது.
இதற்கிடையில், 2021-ல் "தேசிய தலைநகர் பிரதேச டெல்லி அரசு திருத்தச் சட்டம்" நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. புதிய சட்டத் திருத்தத்தின்படி, டெல்லி அரசு எந்த முடிவு எடுத்தாலும், துணை நிலை ஆளுநரின் கருத்தைக் கேட்டறிவது கட்டாயமாக்கப்பட்டது. இதன் பிறகு அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கும்கூட, துணைநிலை ஆளுநரின் அனுமதியைப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த சூழலில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில் கூறியிருப்பதாவது: இதர யூனியன் பிரதேசங்களுக்கும், டெல்லிக்கும் வித்தியாசம் இருக்கிறது. டெல்லிக்கு மாநில அந்தஸ்து இல்லாமல் இருக்கலாம். ஆனால், சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கிறது. ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் மட்டுமே அதிகாரம் இருக்க வேண்டும்.
பொது ஒழுங்கு, காவல் துறை, நிலம் உள்ளிட்ட விவகாரங்களைத் தவிர்த்து, இதர அனைத்து அதிகாரங்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கே உள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள், அவரவர் துறை சார்ந்த அமைச்சர்களுக் குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.
டெல்லி துணைநிலை ஆளுநரைவிட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே முழு அதிகாரமும் உள்ளது. டெல்லி அரசின் அறிவுரைப்படியே துணைநிலை ஆளுநர் செயல்பட வேண்டும். இவ்வாறு அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து, மத்திய அரசு சார்பில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
10 மடங்கு வேகத்தில்...: இது தொடர்பாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறும்போது, "கடந்த 8 ஆண்டுகளாக டெல்லி அரசின் திட்டங்கள் தடுக்கப்பட்டன. எனது கைகள் கட்டப்பட்டு இருந்தன. அனைத்து எதிர்ப்புகள், தடைகளைத் தாண்டி மக்களுக்கு சேவையாற்றி வந்தோம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் எங்களுக்கு முழு அதிகாரம் கிடைத்திருக்கிறது. இனிமேல் 10 மடங்கு வேகத்தில் நலத்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும். தகுதி, திறமையின் அடிப்படையில் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள், இடமாற்றம் செய்யப்படு வார்கள்" என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago