பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று அமைதியாக நடந்தது. சுமார் 72.22 சதவீத வாக்குப்பதிவு நடந்ததாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் 2.67 கோடி ஆண்கள், 2.64 கோடி பெண்கள் என 5.31 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
மாநிலம் முழுவதும் 58,282வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் 11,617 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டன. தேர்தல் பணியில் 3.51 லட்சம் அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு இணையவழியாக கண்காணிக்கப்பட்டது.
தேர்தல் பாதுகாப்பு பணியில் துப்பாக்கி ஏந்திய போலீஸார், துணை ராணுவ படையினர் உள்ளிட்ட 1.56 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.
» கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 72.22% வாக்குப்பதிவு
» ஜூன் மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி: வெள்ளை மாளிகை தகவல்
மும்முனை போட்டி: இத்தேர்தலில் ஆளும் பாஜக 224, எதிர்க்கட்சியான காங்கிரஸ் 223 (ஒரு தொகுதி விவசாய சங்கம்), மதச்சார்பற்ற ஜனதா தளம்207, ஆம் ஆத்மி 217, பகுஜன் சமாஜ் 133 தொகுதிகளில் களமிறங்கின. 918 சுயேச்சைகள் உட்பட மொத்தமாக 2,613 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.
முதல்வர் பசவராஜ் பொம்மை ஷிகோன் தொகுதியிலும், முன்னாள் முதல்வர் சித்தராமையா வருணா தொகுதியிலும், மஜத தலைவர் குமாரசாமி சென்னபட்ணா தொகுதியிலும், காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கனகபுரா தொகுதியிலும் போட்டியிட்டனர்.
கோலார் தங்கவயலில் இந்திய குடியரசு கட்சி சார்பில் எஸ்.ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஜோதிபாசு, மார்க்சிஸ்ட் சார்பில் தங்கராஜ் ஆகியோரும், புலிகேசி நகரில் பாஜக சார்பில் முரளி, சி.வி.ராமன் நகரில் காங்கிரஸ் சார்பில் ஆனந்த் குமார் ஆகியதமிழ் வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.
காங்கிரஸ், பாஜக, மஜத ஆகியகட்சிகளுக்கு பரவலான செல்வாக்கு இருப்பதால், இந்த கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி உள்ளது. 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸூக்கும், பாஜகவுக்கும் நேரடி மோதல் உள்ளது. 2024 மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படுவதால் இரு கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டன.
தலைவர்கள் தீவிர பிரச்சாரம்: பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா, முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில தலைவர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர்.
மஜத வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டனர். பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாயாவதி பெங்களூருவில் பிரச்சாரம் செய்தார். 217 தொகுதிகளில் போட்டியிட்டும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் பிரச்சாரம் செய்யவில்லை.
நாட்டில் முதல்முறையாக, 80 வயதை கடந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் வீட்டில் இருந்தவாறு வாக்களிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. அவர்களுக்கான வாக்குப்பதிவு கடந்த 29-ம் தேதியில் இருந்து மே 8-ம் தேதி வரை நடைபெற்றது. அதில் 94,326 பேர் வாக்களித்தனர்.
நேற்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. காலை முதலே முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், இளைஞர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். இரவு 10.30 மணி நிலவர கணக்கீட்டின்படி சுமார் 72.22 சதவீத வாக்குப்பதிவு நடந்ததாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
பீஜாப்பூர் அடுத்த பசவண்ணபகோடியில் வாக்குப்பதிவு தொடங்கிய பின்னர் தேர்தல் அதிகாரிகள் வாகனத்தில் கூடுதல் வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்களை கொண்டு வந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த காங்கிரஸார் வாக்குப்பதிவு இயந்திரங்களை பறிமுதல் செய்து, சாலையில் போட்டு உடைத்தனர்.
மே 13-ல் வாக்கு எண்ணிக்கை: வாக்கு எண்ணும் மையங்களில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. மே 13-ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். காலை 10 மணி முதல்முன்னிலை விவரம் வெளியாகி பிற்பகலில் முடிவுகள் அறிவிக்கப்படும்.
தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு: கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில், 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும்.
இந்த நிலையில், தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலானவை காங்கிரஸுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளன. கணிசமான கணிப்புகள், எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்று குறிப்பிட்டுள்ளன.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் பெரும்பாலும் காங்கிரஸுக்கு சாதகமாக உள்ளன. ஓரிரு முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வந்துள்ளன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என 3 கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘‘இத்தேர்தலில் காங்கிரஸ் அமோகமாக வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும். காங்கிரஸ் 130-135 இடங்களில் வெற்றிபெறும்'' என்றார். பாஜக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, ‘‘பிரதமர் மோடியின் இரட்டை இன்ஜின் அரசுக்கு மக்கள் நல்ல முடிவை தருவார்கள். பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும்'' என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago