கேபினில் தீப்பிடித்து கருகும் வாசனை: திருச்சி - சிங்கப்பூர் விமானம் அவசர தரையிறக்கம்

By செய்திப்பிரிவு

மும்பை: திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு கிளம்பிச் சென்ற இண்டிகோ விமானத்தின் கேபின் பகுதியில் தீப்பிடித்து கருகிய வாசனை வந்ததையடுத்து விமானிகள் இந்தோனேசியாவில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர்.

இதுகுறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு இண்டிகோ விமானம் செவ்வாய்க்கிழமை புறப்பட்டு சென்றது. அப்போது, விமானத்தின் கேபின் பகுதியில் தீப்பற்றி எரியும் வாசனை வந்ததையடுத்து, விமானிகள் உரிய முன்னெச்சரிக்கை நடைமுறைகளை பின்பற்றி அருகில் உள்ள இந்தோனேசியாவின் மேடான் விமான நிலையத்தில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர்.

இதையடுத்து, அங்கு காத்திருந்த தொழில்நுட்ப குழு விமானத்தைசோதனையிட்டனர். முதல்கட்ட மாக அதில் எந்த சிக்கல்களும் கண்டறியப்படவில்லை. பயணிகள் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன், அவர்களை சிங்கப்பூருக்கு அழைத்து செல்ல மாற்று விமானமும் ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்வாறு இண்டிகோ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

6இ-1007 இண்டிகோ விமானம் திருச்சிராப்பள்ளியில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு 7 மணியளவில் புறப்பட்டு சுமார் மூன்று மணி நேரம் கழித்து இந்தோனேசியாவின் வான்வெளியில் 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது இப்பிரச்சினையால் 10,000 அடிக்கு விமானம் வேகமாக கீழிறங்கிய காட்சி ப்ளைட்ரேடாரில் பதிவானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE