கேஜ்ரிவாலுக்கு அதிகரிக்கும் அரசு குடியிருப்பு சிக்கல் - சுற்றுச்சூழல் அனுமதி, ஊழல் புகார்கள்மீது விசாரணை

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ரூ.45 கோடியில் புதுப்பித்த அரசு குடியிருப்பால் சிக்கல் அதிகரித்து வருகிறது. இதன் மீதான சுற்றுச்சூழல் மற்றும் ஊழல் புகார்கள் மீது விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

டெல்லியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தனது அரசு குடியிருப்பை முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அண்மையில் புதுப்பித்திருந்தார். இதற்கான சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் அதன் விதிகள் மீறப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இதன் மீது நரேஷ் சவுத்ரி என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்தக் கட்டிடத்தின் தற்காலிக மற்றும் நிரந்தர கட்டிடப் பணிகளில் சுற்றுச்சூழல் விதிகள் மீறப்பட்டிருப்பதாகவும், அங்கிருந்த பழமையான 20 மரங்கள் வெட்டப்பட்டிருப்பதாகவும் தனது புகாரில் நரேஷ் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார்.

இதை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே.கோயல், சுதிர் கோயல் மற்றும் நிபுணர் ஏ.கே.செந்தில்வேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஓர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு குழு அமைத்து விசாரித்து ஒரு வாரத்துக்குள் அறிக்கை அளிக்கும்படி கூறப்பட்டுள்ளது.

அதன்படி, தலைமை செயலாளர் விசாரணைக் குழு அமைத்துள்ளார். இதன் உறுப்பினர்களாக மாவட்ட ஆட்சியர், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை முதன்மை செயலாளர், டெல்லி நகர்ப்புற வளர்ச்சித் துறை நிர்வாகி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதனிடையே, டெல்லி காங்கிரஸின் முன்னாள் மாநிலத் தலைவர் அஜய் மாக்கனும் முதல்வர் கேஜ்ரிவால் குடியிருப்பு தொடர்பாக ஒரு புகார் அளித்துள்ளார். டெல்லியின் துணை நிலை ஆளுநர் ஏ.கே.சக்சேனாவிடம் அளிக்கப்பட்ட இப்புகாரில் அவர் 7 முக்கிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். அதில் குடியிருப்புக்காக செய்த செலவு ரூ.45 கோடி அல்ல, ரூ.171 கோடி என்று கூறியுள்ளார்.

இந்த நிதித்தொகை, கரோனா பரவல் காலத்தில் மருத்துவமனைகளில் படுக்கை மற்றும் பிராண வாயு தட்டுப்பாடு சமயத்தில் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் புகார் கூறியுள்ளார். இதன் மீதும் ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு அதன் ஒவ்வொரு புகார் மீதும் ஒரு வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்க, துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இந்த புகார்களை டெல்லி பாஜகவினர் ஏற்கெனவே கையில் எடுத்து தீவிரமாகப் போராடி வருவது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE