சட்டப்படி தனிநபர்கள் கூட குழந்தையை தத்தெடுக்க முடியும் - உச்ச நீதிமன்றம் கருத்து

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தனிநபர்கூட குழந்தையை தத்தெடுத்துக் கொள்ள சட்டம் அனுமதிக்கிறது என தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கக் கோரும் மனுவை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தன்பாலின திருமணத்துக்கு சட்ட ரீதியாக அங்கீகாரம் வழங்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த மனுக்கள் மீது 9-வது நாளாக நேற்று விசாரணை நடைபெற்றது. அப்போது, குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் (என்சிபிசிஆர்) சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐய்ஷ்வர்யா பாட்டி வாதிடும்போது, “ஆண்-பெண் (வெவ்வேறு பாலின) தம்பதிக்கு இயற்கையாக பிறந்த குழந்தைகள் நலனை பாதுகாக்கும் வகையில் நமது சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது வெவ்வேறு பாலின தம்பதியையும் தன்பாலின தம்பதியையும் சமமாக கருத முடியாது என்பதை உணர்த்துவதாக உள்ளது. குழந்தைகளின் நலனே முதன்மையானது என நமது சட்டத்தின் பல்வேறு நிலைகளில் கூறப்பட்டுள்ளது. மேலும் குழந்தையை தத்தெடுப்பது ஒருவரின் அடிப்படை உரிமை அல்ல என பல்வேறு தீர்ப்புகளில் கூறப்பட்டுள்ளது” என்றார்.

இதையடுத்து, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறும்போது, “தனி நபர்கூட குழந்தையை தத்தெடுக்க நமது சட்டம் அனுமதி அளிக்கிறது. ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தன்பாலின ஈர்ப்பாளராக இருந்தால்கூட குழந்தையை தத்தெடுக்கலாம். குழந்தை பெற்றுக்கொள்ள தகுதி உடையவர்கூட குழந்தையை தத்தெடுக்கலாம். குழந்தை பெற தகுதி உள்ளவர்கள் குழந்தையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமல்ல” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE