11,100 கோப்புகளை அழிக்கும் முடிவு காங்கிரஸ் ஆட்சியில் எடுக்கப்பட்டது: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்

அழிக்கப்பட வேண்டிய கோப்புகளில் 11,100 கோப்புகள் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு. கூட்டணி ஆட்சிக் காலத்தில்தான் அடையாளம் காணப்பட்டன. இந்திய வரலாற்றுடன் தொடர்புடைய எந்தக் கோப்பும் அழிக்கப்படவில்லை என மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்துள்ளார்.

மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றவுடன் உள்துறை அமைச்சகம் சார்ந்த பழைய கோப்புகள் சமீபத்தில் அழிக்கப்பட்டன. இது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. 11 ஆயிரம் கோப்புகளை அழிப்பது பற்றிய முடிவு ஒரே நொடியில் எடுக்கப்பட்டது. மகாத்மா காந்தி கொலை வழக்கு உள்பட பல்வேறு முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டு விட்டன. நாட்டின் வரலாற்றை மாற்ற பாஜக அரசு முயற்சி செய்கிறது என காங்கிரஸ் மற்றும் இடதுசாரி எம்.பி.க்கள் குற்றம்சாட்டினர்.

இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநிலங்களவையில் திங்கள் கிழமை விளக்கமளித்தார்.

அவர் கூறியதாவது:

அழிக்கப்பட வேண்டிய 11,100 கோப்புகள் காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தில்தான் அடையாளம் காணப்பட்டன. இதற்கான பணிகள் 2012 ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் 2013 மே 2-ம் தேதி வரை நடந்தது. இப்பணியில் 500 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.

பாஜக தலைமையிலான கூட்டணி அரசு தேசத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியை அழிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக யாரும் அஞ்சத் தேவையில்லை. அதுபோன்ற நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபட மாட்டோம்.

மகாத்மா காந்தி, முன்னாள் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, இந்தியாவின் கடைசி வைஸ்ராய் மவுண்ட் பேட்டன் ஆகியோர் தொடர்பான கோப்புகள் அழிக்கப்படவில்லை.

முதல் முறை அல்ல

கோப்புகள் அழிக்கப்படுவது இது முதல்முறை அல்ல. அலுவலக நடைமுறையின்படி ஏற்கெனவே பலமுறை கோப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போதும் கோப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. இது தொடர்ச்சியான நடைமுறை.

தேசத்தின் வரலாற்றுடன் தொடர்புடைய எந்த ஆவணங்களும், எக்காரணம் கொண்டும் அழிக்கப்படுவது அனுமதிக்கப்படாது. இந்திய வரலாற்றுத் தொடர்ச்சியை மாற்றியமைக்க ஒருவரையும் அனுமதிக்க முடியாது.

எங்களின் அரசு திறந்த புத்தகம். அரசாங்கத்தின் நடைமுறைகளை வெளிப்படையாக செயல்படுத்தவே விரும்புகிறோம். இது தொடர்பான தகவலை நான் எழுத்துப்பூர்வமாகவும் கொடுக்கத் தயார்.

மொத்தம் 1,17,102 கோப்புகள் மதிப்பிடப்பட்டன. அவற்றில் 44, 177 கோப்புகள் அழிக்கப்படவேண்டியவை. 27,879 கோப்புகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. 45,646 கோப்புகள் பயன்பாட்டில் உள்ளன. 25 ஆண்டுகள் கடந்த முக்கியமான கோப்புகள் தேசிய ஆவணக்காப்பகத்துக்கு அனுப்பப்பட்டு விடும். விதிமுறைப்படியே கோப்புகள் அழிக்கப்படுகின்றன. ஒவ்வொரு கோப்பு பற்றிய விவரமும் அவையில் சமர்ப்பிக்கப்படும் என உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் பதிலளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE