ஜூன் மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி: வெள்ளை மாளிகை தகவல்

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்: வரும் ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்திக்கிறார்.

இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அரசுமுறை பயணமாக அமெரிக்கா வருகைதரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, நம் அதிபர் ஜோ பைடன் ஜூன் 22ஆம் தேதியன்று அரசு விருந்து அளிக்கிறார். இதில் அதிபரின் மனைவி ஜில் பைடனும் கலந்து கொள்கிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணம் குறித்து பல மாதங்களாக திட்டங்கள் இருந்தது. இந்நிலையில் அது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு மூலம் இருநாட்டு நல்லுறவை பேணப்படும் என்று வெள்ளை மாளிகை செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.

அதேபோல், பிரதமர் மோடியின் இந்தப் பயணம், சுதந்திரமான, திறந்த, வளமான மற்றும் பாதுகாப்பான இந்தோ-பசிபிக்கிற்கான இரு நாடுகளின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் மற்றும் பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் விண்வெளி உள்ளிட்ட துறைகளில் உள்ள கூட்டாண்மையை வலுப்படுத்தும் என்றும் வெள்ளை மாளிகை தரப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே, "இரு நாடுகள் இடையேயான தொழில்நுட்பம், வர்த்தகம், தொழில், கல்வி, ஆராய்ச்சி, எரிசக்தி, பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வலுவான இருதரப்பு ஒத்துழைப்பை மறுபரிசீலனை செய்ய இந்த சந்திப்பு கிடைக்கும். மேலும், இந்தோ-பசிபிக் மற்றும் குவாட் ஈடுபாட்டை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை பற்றியும் இருநாட்டு தலைவர்களும் விவாதிப்பார்கள்" என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) தெரிவித்துள்ளது.

பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின் பிரதமர் மோடி முதல்முறையாக வெள்ளை மாளிகை செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE