கர்நாடக தேர்தல் | தேர்தல் நாளின் முதல் கடமை வாக்களிப்பதே: இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி

By செய்திப்பிரிவு

பெங்களூரு: இளைஞர்கள் தவறாமல் வந்து வாக்களிக்க வேண்டும் என்று இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமைகளை ஆற்றி வருகிறார்கள். இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, இணை நிறுவனர் சுதா மூர்த்தி ஆகியோர் பெங்களூருவில் உள்ள ஜெயநகர் வாக்குச்சாவடியில் தங்கள் வாக்கினை செலுத்தினர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, பாஜக தலைமையிலான அரசின் 5 ஆண்டு செயல்பாடு திருப்தி அளிக்கிறதா? வாக்குச்சாவடிக்கு இளைஞர்களின் வருகை குறைவாக இருக்கிறதே, இளைஞர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்றெல்லாம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த நாராயண மூர்த்தி, "தேர்தலின்போது இந்த கட்சியின் ஆட்சி சரியா, அந்த கட்சியின் ஆட்சி சரியா என்ற விவாதம் நடக்கிறது. முதலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். அதன் பிறகு சரி, சரியல்ல என்பது குறித்து பேச வேண்டும். வாக்களிக்கும் கடமையைச் செய்யாதபோது, இது குறித்து பேசுவதற்கு உரிமை இல்லை. அதேபோல், ஒரு அரசு பற்றி விமர்சிக்க வேண்டுமானால் அதற்கு உரிய தரவுகளோடு பேச வேண்டும். தரவுகள் இன்றி குற்றம் சாட்டத் தொடங்கினால் நீங்கள் நம்பகத்தன்மையை இழப்பீர்கள். எனவே நான் அதை செய்ய விரும்பவில்லை.

மக்கள் வாழ்வதற்கு ஏற்ற உலகின் மிகச்சிறந்த இடங்களில் ஒன்றாக பெங்களூரு திகழ வேண்டும். இளைஞர்கள் கல்வி கற்பதற்கும், வேலையை பெறுவதற்கும், சமூகத்திற்கு நல்லது செய்வதற்கும் ஏற்ற இடமாக இது திகழ வேண்டும். இந்தியாவில் உள்ள கிராமப்புற மாணவர்களுக்கும் சரியான கல்வி, சரியான சுகாதாரம், சரிவிகித உணவு, சிறந்த எதிர்காலம் ஆகியவை கிடைக்க வேண்டும்.

இளைஞர்கள் தவறால் வாக்களிக்க வேண்டுமானால், அதற்கான அறிவுரையை மூத்தவர்கள் வழங்க வேண்டும். இளைஞர்களின் அருகில் அமர்ந்து வாக்களிப்பது ஏன் முக்கியம் என்பது குறித்து அவர்களுக்கு மூத்தவர்கள் விளக்க வேண்டும். எனது பெற்றோர்கள் அதைத்தான் செய்தார்கள். தேர்தல் நாளில் நமது முதல் கடமையாக வாக்களிப்பதுதான் இருக்க வேண்டும். வாக்களிக்காமல் வேறு எங்கும் செல்லக்கூடாது. வாக்களிப்பதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டவில்லை என்றால் முதியவர்களைத்தான் நான் குற்றம் சொல்வேன்" என தெரிவித்தார்.

இளைஞர்கள் வாக்களிப்பது குறைவாக உள்ளது குறித்த கேள்விக்கு சுதா மூர்த்தியும் பதில் அளித்திருந்தார். அவர் தனது பதிலில், "இளைஞர்கள் எங்களைப் பார்க்க வேண்டும். நாங்கள் வயதானவர்கள். இருந்தும் காலை 6 மணிக்கே எழுந்து கிளம்பி இங்கு வந்து ஓட்டு போட்டுள்ளோம். எங்களிடம் இருந்து அவர்கள் கற்க வேண்டும். வாக்களிப்பது ஜனநாயகத்தின் புனித கடமை. எந்த ஒரு ஜனநாயகத்திலும் வாக்கு என்பது மிகவும் முக்கியம். வாக்களிப்பு இல்லாவிட்டால் அது ஜனநாயகமே அல்ல. எனவே, வாக்களிப்பதற்கு மரியாதை கொடுக்க வேண்டும். வாக்களிக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும். மாற்றம் வேண்டும் என்றாலும், தொடர்ச்சி வேண்டும் என்றாலும், திட்டங்கள் வேண்டும் என்றாலும், நீங்கள் விரும்பக்கூடியதை அரசு செய்ய வேண்டும் என்றாலும் நீங்கள் முதலில் வாக்களிக்க வேண்டும்" என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE