கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் | வாக்குப்பதிவு விறுவிறுப்பு

By செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாகவும் அமைதியாகவும் நடைபெற்று வருகிறது.

ஒரே கட்டமாக நடைபெறும் தேர்தல்: கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான‌ தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது. இதில் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2.67 லட்சம் பேரும், பெண் வாக்காளர்கள் 2.64 லட்சம் பேரும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 5ஆயிரம் பேரும் அடங்குவ‌ர். தேர்தலில் மக்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிப்பதற்கு வசதியாக மாநிலம் முழுவதும் 15 ஆயிரம் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.

பாதுகாப்புப் பணியில் 1.56 லட்சம் போலீசார்: வாக்காளா்கள் வாக்களிக்க வசதியாக மாநிலம் முழுவதும் 58 ஆயிரத்து 282 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 11 ஆயிரத்து 617 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன‌. தேர்தல் பணியில் 3 லட்சத்து 51 ஆயிரத்து 153 அலுவலர்கள் ஈடுபடுகின்றனர். வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸாரும், துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டு இணையவழியாக கண்காணிக்கப்படுகிறது. மொத்தமாக தேர்தல்பாதுகாப்பு பணியில் 1 லட்சத்து 56 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளன‌ர்.

பிரபலங்கள் வாக்களிப்பு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெங்களூருவில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அம்மாநில அமைச்சர்கள் அரக ஞானேந்திரா, கே. சுதாகர், ஆர். அஷோகா, அஸ்வத் நாராயண், சித்தலிங்க மடத்தின் மடாதிபதி சுவாமி சித்தகங்கா, நடிகர் பிரகாஷ் ராஜ், நடிகை அமுல்யா உள்பட பலரும் காலையிலேயே தங்கள் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்குகளைச் செலுத்தினர்.

முதல்வர் பேட்டி: வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பாஜக தேர்தல் பிரச்சாரம் செய்த முறையும், வாக்காளர்கள் அளித்த ஆதரவும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. மக்கள் அனைவரும் கர்நாடகாவின் வளர்ச்சிக்காக தங்கள் வாக்குகளைச் செலுத்த வேண்டும்" என தெரிவித்தார்.

பிரதமர் மோடி ட்வீட்: பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில், "கர்நாடக மக்கள், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களித்து ஜனநாயகத்தின் திருவிழாவை செழுமைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

இன்று மாலை வாக்குப்பதிவு முடிந்த பின்னர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பத்திரமாக மண்டல மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்படும். பின்னர் மே 13ம் தேதி காலை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பாஜக, காங்., மஜத இடையே மும்முனை போட்டி: 224 தொகுதிகளுக்கான இந்த தேர்தலில் ஆளும் பாஜக 224, எதிர்க்கட்சியான‌ காங்கிரஸ் 223 (ஒரு தொகுதி விவசாய சங்கம்), மதசார்பற்ற ஜனதா தளம் 207, ஆம் ஆத்மி 217, பகுஜன் சமாஜ் 133 தொகுதிகளில் களமிறங்கியுள்ளன. 918 சுயேச்சைகள் உட்பட மொத்தமாக 2,613 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்ற‌னர்.

முதல்வர் பசவராஜ் பொம்மை ஷிகோன் தொகுதியிலும், முன்னாள் முதல்வர் சித்தராமையா வருணா தொகுதியிலும், மஜத தலைவர் குமாரசாமி சென்னபட்ணா தொகுதியிலும், காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கனகபுரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். கோலார் தங்கவயலில் இந்திய குடியரசு கட்சி சார்பில் எஸ்.ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஜோதி பாசு, மார்க்சிஸ்ட் சார்பில் தங்கராஜ் ஆகியோரும், புலிகேசி நகரில் பாஜக சார்பில் முரளி, சி.வி.ராமன் நகரில் காங்கிரஸ் சார்பில் ஆனந்த் குமார் ஆகிய தமிழ் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

இருப்பினும் காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய கட்சிகளுக்கு கர்நாடகாவில் பரவலான செல்வாக்கு இருப்பதால், இந்த கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. 2024ம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படுவதால் இரு கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டன.

முதியவர், மாற்றுத் திறனாளிகள் 94% பேர் வாக்குப்பதிவு: நாட்டில் முதன் முறையாக, கர்நாடகாவில் 80 வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தவாறு வாக்களிக்கும் வசதியை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இதன் மூலம் 99,529 பேர் வாக்களிக்க விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான வாக்குப்பதிவு கடந்த 29ம் தேதியில் இருந்து மே 8ம் தேதி வரை நடைபெற்றது. அதில் 94,326 பேர் வாக்களித்துள்ளனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாக்களிக்கவில்லை. அவர்கள் இன்று வாக்குசாவடியில் நேரடியாக வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்