கரோனா பெருந்தொற்று முழுமையாக ஓயவில்லை - உலக சுகாதார அமைப்பின் முன்னாள் விஞ்ஞானி எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

உலக சுகாதார அமைப்பின் முன்னாள் விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டியிலிருந்து...

கரோனா பெருந்தொற்று முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு (டபிள்யூ.எச்.ஓ.) அறிவித்துள்ளது. உண்மையிலேயே பெருந்தொற்று ஓய்ந்துவிட்டதா?

கரோனா பெருந்தோற்று முழுமையாக முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறமுடியாது. சர்வதேச அளவிலான பொது சுகாதார அவசர நிலையை மட்டுமே டபிள்யூ.எச்.ஓ. நீக்கியிருக்கிறது. இதன்படி கரோனா அபாய நிலை முடிவுக்கு வந்துவிட்டது என்று மட்டுமே கூறலாம். கரோனா அச்சுறுத்தல் இன்னமும் நீடிக்கிறது என்று டபிள்யூ.எச்.ஓ. இயக்குநரே எச்சரித்திருக்கிறார். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

கரோனா வைரஸின் மரபணு மாற்றம் கணிக்க முடியாததாக இருக்கிறது. இனிவரும் காலங்களில் அதிவேகமாக பரவக்கூடிய வீரியமான கரோனா வைரஸ் உருவாக வாய்ப்பு இருக்கிறது.

ஏதாவது ஒரு நாட்டில் வீரியமான கரோனா வைரஸ் பரவுவது கண்ட றியப்பட்டால் டபிள்யூ.எச்.ஓ. மீண்டும் பொது சுகாதார அவசர நிலையை அறிவிக்கும். கரோனா பெருந்தொற்று முழுமையாக ஓயவில்லை. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இன்புளுயன்ஸா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள ஆண்டுதோறும் தடுப்பூசியை செலுத்திக் கொள்கிறோம். இந்த தடுப்பூசியின் மருந்துகளிலும் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. கரோனா தடுப்பூசி காரணமாக அந்த வைரஸை எதிர்க்கும் சக்திநமக்கு கிடைத்திருக்கிறது. இந்த எதிர்ப்பு சக்தி குறையக்கூடும். இன்புளுயன்ஸா தடுப்பூசி போன்று கரோனாவுக்கும் தொடர்ச்சியாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டுமா என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும்.

தொடர்ச்சியாக கரோனா தடுப்பூசி போட வேண்டுமா?

இப்போதைய நிலையில் பெரும்பாலான நாடுகளில் இரு தவணை தடுப்பூசியும், ஒரு பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டு இருக்கிறது. இந்த தடுப்பூசி திட்டமே பெரும்பாலான நாடுகளில் இன்னும் முழுமை அடையவில்லை. இந்தியாவில்கூட 20% பேர் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி உள்ள னர். முதியோர், நாள்பட்ட நோயாளிகளில்கூட 30% பேர் மட்டுமே பூஸ்டர்தடுப்பூசியை செலுத்தி உள்ளனர்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் உலகம் முழுவதும் ஏராளமான புதிய வகை கரோனா வைரஸ்கள் உருவாகி உள்ளன. இவை அனைத்துமே ஒமிக்ரான் கரோனா வைரஸ் குடும்பத்தை சேர்ந்தவையாக உள்ளன. இந்த வைரஸ்களை தடுப்பதில் தற்போதைய கரோனா தடுப்பூசிகள் நல்ல பலன் அளிக்கின்றன. ஆனால் தடுப்பூசியின் வீரியம் எவ்வளவு காலம் நீடித்திருக்கும் என்பதை துல்லியமாக கணிக்க முடியாது. ஒரு சிலருக்கு மீண்டும் மீண்டும் கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.

நூறு சதவீதம் பலன் அளிக்கக்கூடிய தடுப்பூசி நம்மிடம் இல்லை என்பதே உண்மை. தடுப்பூசி தொடர்பாக தொடர்ந்து ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும்.

டபிள்யூ.எச்.ஓ.வின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு கரோனா வைரஸின்மரபணு மாற்றங்கள் குறித்தும் தடுப்பூசியின் வீரியம் குறித்தும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. குறிப்பாக பல்வேறு இனங்கள், வெவ்வேறு வயது பிரிவு, பல்வேறு சுற்றுச்சூழல்களில் வாழும் மக்களிடையே கரோனா தடுப்பூசி எவ்வாறு பலன் அளிக்கிறது என்பது குறித்து டபிள்யூ.எச்.ஓ. தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.

கரோனா வைரஸ் பரவல், தடுப்பூசி குறித்து இந்தியாவில் தனிப்பட்ட முறையில் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். இதன் அடிப்படையில் இந்திய மக்களுக்கு கூடுதல் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்த வேண்டுமா, யாருக்கெல்லாம் பூஸ்டர் தடுப்பூசி தேவைப்படும், பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கான கால இடைவெளி ஆகியவற்றை தீர்மானிக்க முடியும். அதற்கேற்ப கரோனா தடுப்பூசி தொடர்பான தொலைநோக்கு திட்டத்தை வரையறுக்க முடியும்.

கரோனாவுக்காக உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளை அழிக்கக்கூடாது என்று நீங்கள் கூறியது எதற்காக?

கரோனா மட்டுமன்றி இதர சுகாதார சவால்களையும் எதிர்கொள்ள அனைத்து நாடுகளும் தயார் நிலையில்இருக்க வேண்டும். இதற்கு கரோனாவை எதிர்கொள்ள உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளை அழிக்காமல், அந்தகட்டமைப்புகளை மேலும் மேம்படுத்த வேண்டும். இதன்மூலம் எத்தகைய சுகாதார சவால்களையும் எதிர்கொள்ள முடியும்.

எதிர்காலத்தில் புதிய கரோனா வைரஸ் உருவாகலாம். பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட புதிய அச்சுறுத்தல்கள் எழவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே எதையும் எதிர்கொள்ள தயார்நிலையில் இருக்க வேண்டும். நமதுமருத்துவ கட்டமைப்புகள் போதுமானதா, நாம் தயார் நிலையில் இருக்கிறோமா என்பதை அவ்வப்போது உறுதி செய்து கொள்ள வேண்டும். எவ்வளவு காலத்தில் புதிய பரிசோதனை கருவிகள், தடுப்பூசிகளை கண்டுபிடிக்க முடியும் என்பது குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும்.

ஜி7 அமைப்பு புதிய தீர்மானத்தை முன்மொழிந்திருக்கிறது. அதாவது புதிதாக பெருந்தொற்று ஏற்பட்டால் 100 நாட்களில் தடுப்பூசியை கண்டுபிடிக்க வேண்டும் என்று அந்த அமைப்பு இலக்கு நிர்ணயித்திருப்பது வரவேற்கத்தக்கது.

கரோனா தடுப்பூசி பக்க விளைவுகளை தடுக்க முடியுமா?

காலாவதி தடுப்பூசிகள், மருத்துவ பணியாளர்களின் கவனக்குறைவு, தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்ததகவல்களை முறையாகப் பதிவு செய்ய வேண்டும். ஆனால் அந்த தகவல்கள் பொதுவெளியில் கசிந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில் சிலருக்கு பாதிப்பு ஏற்படுவது இயல்பானது. அவை குறித்த தகவல்கள் பொதுமக்களிடையே பரவினால் மோசமான விளைவுகள் ஏற்படும். 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும்போது 5 பேருக்கு பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

அஸ்ட்ராஜெனிகா கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் சிலருக்கு ரத்த உறைவும் ஆர்என்ஏ தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களில் சிலருக்கு இதய தசையழற்சிபிரச்சினைகளும் ஏற்பட்டன. இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டவர்களில் சிலர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலானோர் குணமடைந்து விட்டனர். தடுப்பூசிகளால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து தீவிரமாக ஆராய வேண்டும்.

டபிள்யூ.எச்.ஓ.-வை பொறுத்தவரை தடுப்பூசி, மருந்துகளுக்கு அனுமதி வழங்கும்போது புள்ளிவிவரங்களை மிகவும் கவனமாக ஆய்வு செய்கிறோம். தடுப்பூசி, மருந்துகளின் பரிசோதனைகளில் திருப்திகரமான முடிவுகள் கிடைத்தால் மட்டுமே அவற்றுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. பெரும்பாலும் வளர்ந்த நாடுகள் மட்டுமே தெளிவான புள்ளிவிவரங்களை அளிக்கின்றன. வளரும் மற்றும் பின்தங்கிய நாடுகளில் தடுப்பூசி, மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்த தரவுகள் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. இந்த நிலை மாற வேண்டும். வெளிப்படைத்தன்மை இருந்தால்மட்டுமே மக்களிடம் நம்பிக்கை ஏற்படும்.இதுதொடர்பாக அந்தந்த நாடுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்களுக்கான அறிவுரை என்ன?

கரோனா பெருந்தொற்றை எவ்வாறுஎதிர்கொள்வது என்பது குறித்த முழுமையான அறிவை நாம் பெற்றிருக்கிறோம். கரோனாவுக்கு எதிரான போரில் பின்பற்றிய தடுப்பு நடைமுறைகளை பொதுமக்கள் எப்போதும் பின்பற்ற வேண்டும்.

அனைவரும் இரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தி இருப்பது நல்லது. பூஸ்டர் தடுப்பூசியும் அவசியமானது. என்னைப் பொறுத்தவரை வீட்டை விட்டு வெளியே செல்லும்போது அனைவரும் முகக்கவசம் அணிவது பாதுகாப்பானது. இதன்மூலம் நீங்கள், உங்களையும் பாதுகாக்கலாம், மற்றவர்களையும் நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க முடியும்.

வீடு, அலுவலகம், பொது இடங்களில் சுத்தம், சுகாதாரத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதன்மூலம் கரோனா வைரஸ் மட்டுமன்றி நுரையீரல் தொடர்பான நோய்களில் இருந்தும் தற்காத்து கொள்ளமுடியும். தடுப்பூசி, முகக்கவசம், கூட்டநெரிசல் மிகுந்த இடங்களைத் தவிர்ப்பது, சுத்தத்தைப் பேணுவது, அடிக்கடி கைகளை கழுவுவது ஆகிய நடைமுறைகளை அனைத்து தரப்பு மக்களும் பின்பற்ற வேண்டுகிறேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

33 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்