கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - 1.5 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

By இரா.வினோத்


பெங்களூரு: கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 1.5 லட்சம் போலீஸார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான‌ தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது. இதில் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2.67 லட்சம் பேரும், பெண் வாக்காளர்கள் 2.64 லட்சம் பேரும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 5ஆயிரம் பேரும் அடங்குவ‌ர். தேர்தலில் மக்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிப்பதற்கு வசதியாக மாநிலம் முழுவதும் 15 ஆயிரம் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.

வாக்காளா்கள் வாக்களிக்க வசதியாக மாநிலம் முழுவதும் 58 ஆயிரத்து 282 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 11 ஆயிரத்து 617 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன‌. தேர்தல் பணியில் 3 லட்சத்து 51 ஆயிரத்து 153 அலுவலர்கள் ஈடுபடுகின்றனர். வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸாரும், துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டு இணையவழியாக கண்காணிக்கப்படுகிறது. மொத்தமாக தேர்தல்பாதுகாப்பு பணியில் 1 லட்சத்து 56 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளன‌ர்.

பாஜகவின் பல கட்ட பிரச்சாரம்: பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர‌ மோடி,மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர்ஜே.பி.நட்டா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, முதல்வர் பசவராஜ் பொம்மை, பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய மாநில அமைச்சர்கள், தேர்தல் இணை பொறுப்பாளர் அண்ணாமலை உட்பட ஆயிரக்கணக்கான தலைவர்கள் கடந்த 3 மாதங்களாக கர்நாடகாவில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர்.

இறுதியில் வேகமெடுத்த காங்கிரஸார்: காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது சொந்த மாநிலம் என்பதால் கடந்த 17 நாட்களாக கர்நாடகா முழுவதும் பயணித்து பிரச்சாரம் மேற்கொண்டார். பாரத ஒற்றுமை யாத்திரைக்கு பின் ஏப்ரல் 16ம் தேதி கர்நாடகா வந்த ராகுல் காந்தி சுமார் 20 நாட்களில் 30-க்கும் மேற்பட்ட கூட்டங்கள், 6 பேரணிகள், 5 கலந்தாலோசனை கூட்டங்களில் பேசினார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி 7 நாட்களில் 15 க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களிலும், 6 சாலை பேரணிகளிலும், 2 கலந்தாலோசனை கூட்டங்களிலும் பங்கேற்றார். உடல் நலக்குறைவு காரணமாக முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஹூப்ளியில் நடந்த ஒரே ஒரு கூட்டத்தில் பங்கேற்றார்.

அதேவேளையில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவும், கர்நாடக மாநில தலைவர் டி.கே.சிவகுமாரும் மாநிலம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் உரையாற்றினர்.

91 வயதில் தேவகவுடா பிரச்சாரம்: மஜத வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமர் தேவகவுடா 91 வயதிலும் திறந்த வாகனத்தில் நின்றவாறு பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னாள் முதல்வர் குமாரசாமி மாநிலம் முழுவதும் பேரணி மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.

நேற்று முன் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் கட்சி அலுவலகங்கள், தனியார் விடுதிகள் ஆகியவற்றில் போலீஸார் சோதனை நடத்தி அங்கிருந்தவர்களை வெளியேற்றினர். வேட்பாளர்கள் மட்டும் நேற்று வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தன‌ர்.

இந்த தேர்தலையொட்டி கடந்த ஒரு மாதமாக அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.375 கோடி மதிப்புள்ள பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில்ரொக்கமாக ரூ.147 கோடி, ரூ.25கோடி மதிப்பிலான பரிசு பொருட்கள், ரூ.83 கோடி மதிப்பிலான மதுபானம், ரூ.23 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள், ரூ.96 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளிநகைகள் ஆகியவை அடங்கும்.இதுதொடர்பாக, தேர்தல் ஆணையம் சார்பில் 2,896 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இன்று மாலை வாக்குப்பதிவு முடிந்த பின்னர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பத்திரமாக மண்டல மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்படும். பின்னர் மே 13ம் தேதி காலை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பாஜக, காங்., மஜத இடையே மும்முனை போட்டி: 224 தொகுதிகளுக்கான இந்த தேர்தலில் ஆளும் பாஜக 224, எதிர்க்கட்சியான‌ காங்கிரஸ் 223 (ஒரு தொகுதி விவசாய சங்கம்), மதசார்பற்ற ஜனதா தளம் 207, ஆம் ஆத்மி 217, பகுஜன் சமாஜ் 133 தொகுதிகளில் களமிறங்கியுள்ளன. 918 சுயேச்சைகள் உட்பட மொத்தமாக 2,613 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்ற‌னர்.

முதல்வர் பசவராஜ் பொம்மை ஷிகோன் தொகுதியிலும், முன்னாள் முதல்வர் சித்தராமையா வருணா தொகுதியிலும், மஜத தலைவர் குமாரசாமி சென்னபட்ணா தொகுதியிலும், காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கனகபுரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். கோலார் தங்கவயலில் இந்திய குடியரசு கட்சி சார்பில் எஸ்.ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஜோதி பாசு, மார்க்சிஸ்ட் சார்பில் தங்கராஜ் ஆகியோரும், புலிகேசி நகரில் பாஜக சார்பில் முரளி, சி.வி.ராமன் நகரில் காங்கிரஸ் சார்பில் ஆனந்த் குமார் ஆகிய தமிழ் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

இருப்பினும் காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய கட்சிகளுக்கு கர்நாடகாவில் பரவலான செல்வாக்கு இருப்பதால், இந்த கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. 2024ம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படுவதால் இரு கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டன.

முதியவர், மாற்றுத் திறனாளிகள் 94% பேர் வாக்குப்பதிவு: நாட்டில் முதன் முறையாக, கர்நாடகாவில் 80 வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தவாறு வாக்களிக்கும் வசதியை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இதன் மூலம் 99,529 பேர் வாக்களிக்க விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான வாக்குப்பதிவு கடந்த 29ம் தேதியில் இருந்து மே 8ம் தேதி வரை நடைபெற்றது. அதில் 94,326 பேர் வாக்களித்துள்ளனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாக்களிக்கவில்லை. அவர்கள் இன்று வாக்குசாவடியில் நேரடியாக வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்