“அவரின் தலைவர் சோனியா இல்லை... வசுந்தரா ராஜே” - அசோக் கெலாட் மீது சச்சின் பைலட் கடும் விமர்சனம்

By செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: "ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் தலைவர் சோனியா காந்தி இல்லை, மாறாக வசுந்தரா ராஜே என்று அம்மாநில முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் புதிய விமர்சனம் ஒன்றை முன்வைத்துள்ளார்.

ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இருவரும் ஒருவர் மீது மற்றொருவர் அவ்வப்போது மறைமுக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், முதல்வர் கெலாட் ஞாயிற்றுக்கிழமை ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அதாவது கடந்த 2020-ம் ஆண்டு தனது அரசை கவிழ்க்க சதி நடந்ததாகவும், அதன் பின்னணியில் அமித் ஷா இருந்ததாகவும், எனினும் எதிர்க்கட்சித் தலைவரான வசுந்தரா ராஜே சிந்தியா தனது அரசை அந்த சதியில் இருந்து காப்பாற்றியதாகவும் கூறி இருந்தார்.

அசோக் கெலாட்டின் இந்த கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாக சச்சின் பைலட் முதல்வர் மீது இந்தத் தாக்குதலைத் தொடுத்துள்ளார். இதுகுறித்து செவ்வாய்க்கிழமை தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சச்சின் பைலட்," முதல்வரின் பேச்சைக் கேட்டதும் அவரின் தலைவர் சோனியா காந்தி இல்லை, மாறாக வசுந்தரா ராஜே தான் அவரின் தலைவர் என்று தோன்றியது. பாஜக அவரது அரசை கவிழ்க்க சதி செய்ததாக முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார். பிறகு பாஜக தலைவரே அவரது அரசைக் காப்பாற்ற உதவினார் என்று கூறுகிறார். இந்த முரணைப் பற்றி முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும்.

வசுந்தரா ராஜே அரசின் ஊழல் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தபோதிலும் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று எனக்கு இப்போது புரிகிறது. அசோக் கெலாட் தனது சொந்தக் கட்சி எம்எல்ஏக்களை அவமானப்படுத்தியதுடன், தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் சொந்த கட்சிக்கு தீங்கிழைத்து விட்டார். அவர் சோனியா காந்தியையும் அவமதித்து விட்டார்.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக கெலாட் என்மீது வைத்த அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நான் பொறுத்துக்கொண்டேன். கட்சிக்கு எந்த விதமான கெட்டபெயர் ஏற்படக்கூடாது என்பதற்காக நான் எதுவும் கூறாமல் இருந்து வந்தேன். நான் துரோகி என்று குற்றம்சாட்டப்பட்டேன். கடந்த 2020 ஆம் ஆண்டு நாங்கள் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைமையை மாற்ற வேண்டும் என்று விரும்பினோம். அதுகுறித்து அகமது பாடேலிடம் பேசினோம். அதற்கான அனைத்து வேலைகளையும் செய்தோம்" என்று கூறினார்.

மேலும் அவர்,"ஊழல் மற்றும் இளைஞர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்காக அஜ்மீரில் இருந்து ஜெய்ப்பூர் வரை ஜன் சங்கர்ஷ் யாத்திரை நடத்த இருக்கிறேன். இந்த யாத்திரை யாருக்கும் எதிரானது இல்லை. ஊழலுக்கு எதிரானது" என்றார்.

இதற்கிடையில், அசோக் கெலாட்டின் பேச்சை முற்றிலும் மறுத்துள்ள வசுந்தரா ராஜே சிந்தியா,"ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அரசு மீது மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய வீழ்ச்சியை சந்திக்க இருக்கிறது. அதை தவிர்க்க அசோக் கெலாட் மேற்கொள்ளும் தந்திரமாகவே இதனைப் பார்க்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE