பிஹார் யூடியூபரின் மனுக்கள் தள்ளுபடி - வடமாநில தொழிலாளர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் காட்டம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக போலியான தகவல்களை பரப்பிய வழக்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யூடியூபர் மணீஷ் காஷ்யப்பின் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மணீஷ் காஷ்யப் தன் மீது பிஹார் மற்றும் தமிழகத்தில் பதியப்பட்ட 3 வெவ்வேறு எஃப் ஐஆர்களையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என்றும், தன் மீதான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "நீங்கள் போலி வீடியோக்களை உருவாக்குவீர்கள். நாங்கள் அதற்கு செவி சாய்க்க வேண்டுமா? தமிழகம் போன்ற நிலையான மாநிலத்தில் நீங்கள் பிரச்சினையை உருவாக்க முயன்றுள்ளீர்கள்" என்று கூறி அவரது மனுக்களை தள்ளுபடி செய்தனர். காஷ்யப்பின் கோரிக்கைகளை நிராகரித்ததோடு இனி இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தையே நாடுமாறும் தெரிவித்தனர். பிஹார் அரசும், காஷ்யப் வழக்கமாகவே குற்றச் செயல்களில் ஈடுபடுவர்கள் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தது.

3 எஃப்ஐஆர்கள்... - முதல் எஃப்ஐஆர், மணீஷின் யூடியூப் சேனல் தொடர்பானது. இது பிஹார் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டதாகும். இரண்டாவது எஃப்ஐஆர் போலி பேட்டிகள் தொடர்பானது. அதில் மணீஷ் விமான நிலையத்தில் சில பயணிகளிடம் தமிழகத்தில் பிஹாரிக்கள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி கேட்கப்பட்ட கருத்துகள் தொடர்பானது. மூன்றாவது எஃப்ஐஆர் தான் தமிழக போலீஸாரால் கைது செய்யப்பட்டதாக அவரே தயாரித்து வெளியிட்ட போலி எஃப்ஐஆர் தொடர்பானது.

இந்நிலையில், இந்த 3 எஃப்ஐஆர்களையும் ஒன்றாக சேர்க்க மணீஷ் கோரினார். அதனை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

நடந்தது என்ன? - தமிழகத்தில் வட­மாநிலத் தொழி­லா­ளர்­கள் கடு­மை­யாக தாக்­கப்­படுகி­ன்றனர். அவர்­களது உயிர்களுக்குப் பாது­காப்பு இல்லை போன்ற தகவல்களுடன் போலியான வீடியோ ஒன்று சில மாதங்களுக்கு முன் சமூக வலைத­ளங்களில் வைரலானது. இந்த போலியான வீடியோ வெளியிட்ட நபர் தொடர்­பாக உரிய விசாரணை நடத்­த காவல் துறைக்கு அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து சைபர் கிரைம் போலீஸார் அடங்கிய தனிப்­படையினர் பிஹார் சென்று விசாரணை நடத்தி யூடியூபரான மணீஷ் காஷ்­யப் (35) என்­ப­வர் கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE