சார்தாம் யாத்திரை வழித்தடத்தை கண்காணிக்க ரூ.200 கோடியில் திட்டம்: மத்திய அரசு விரைவில் அறிமுகம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அவசர காலங்களில் யாத்ரீகர்களுக்கு விரைவாக சேவையளிக்கும் வகையில் சார்தாம் வழித்தடத்தில் போக்குவரத்து மற்றும் சம்பவங்களை கண்காணிக்க மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது. இதற்காக, ரூ.200 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.

யமுனோத்ரி, கங்கோத்ரி மற்றும் கேதார்நாத்தில் இருந்து பத்ரிநாத் வரை சார்தாம் யாத்திரைக்கு ரிஷிகேஷிலிருந்து நான்கு தேசிய நெடுஞ்சாலைகளை லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயன்படுத்துகின்றனர். பல யாத்ரீகர்கள் தரசுவிலிருந்து ருத்ரபிரயாக் வரை மாநில நெடுஞ்சாலையில் செல்கின்றனர். மத்திய அரசின் திட்டத்தின்படி, இந்த நான்கு தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஒரு மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து மற்றும் சம்பவங்களை கண்காணிக்க மொத்தம் 835 கி.மீ. தொலைவுக்கு சுமார் 1,400 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்டவுள்ளன. மேலும், வேகத்தை கண்டறிய 60 சாதனங்களும், 200க்கும் மேற்பட்ட நிலையான கேமராக்கள் விபத்துகள் அல்லதுவேறு ஏதேனும் சம்பவங்களை தானியங்கி முறையில் கண்டறியவும் பொருத்தப்படவுள்ளன. வாகனங்களின் மையப் பதிவேட்டை டிம்ஸ் மூலமாக அணுகமுடியும். மேலும், வானிலை துறையின் வானிலை கண்காணிப்பு, உத்தரகாண்ட் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பூகம்பம் மற்றும் நிலச்சரிவு கண்காணிப்பு மற்றும் மத்திய நீர் ஆணையத்தின் வெள்ள கண்காணிப்பு ஆகியவற்றுடன் டிம்ஸ் ஒருங்கிணைக்கப்படும்.

சார் தாம் யாத்திரை வழித்தட கண்காணிப்பு திட்டம் மூன்றுகட்டங்களாக பிரித்து மூன்று ஆண்டுகளுக்குள் செயல்படுத்தப்படவுள்ளது. முதல் கட்டத்தில் 120.கி.மீ., இரண்டாவது கட்டத் தில் 280 கி.மீ., மூன்றாவது கட்டத்தில் எஞ்சிய 435 கி.மீ., தொலைவுக்கும் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE