தேர்தலுக்கு வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தினால் காங்கிரஸூம், பாஜகவும் தோல்வி அடையும்: கர்நாடகாவில் மாயாவதி பிரச்சாரம்

By இரா.வினோத்


பெங்களரூ: மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தி வாக்களிக்கும் முறையை அமல்படுத்தினால் காங்கிரஸூம், பாஜகவும் தோல்வி அடையும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 114 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. அதன் வேட்பாளர்களை ஆதரித்து பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய‌ தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி பங்கேற்றார். அவருக்கு கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி பேசியதாவது:

உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியில் இருந்த போது சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. தவறு செய்த குற்றவாளிகள் சட்டத்தின்படி தண்டிக்கப்பட்டனர். சாமான்ய மக்களுக்கும் நீதி கிடைத்தது. ஆனால் இப்போது அங்கு புல்டோசர், என்கவுன்ட்டர் ஆட்சி நடைபெறுகிறது. அதனால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் கோட்டையான உத்தரப் பிரதேசத்திலே அக்கட்சி வலுவிழந்து விட்டது என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. அது தவறானது தகவல் என்பதை அழுத்தமாக கூற விரும்புகிறேன். மக்களவை, மாநிலங்களவை தேர்தல்கள் வாக்கு சீட்டு மூலம் வாக்குப்பதிவு செய்த போது ​​பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியை பிடித்தது. அதன் வாக்கு சதவீதமும் அதிகரித்திருந்தது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட பிறகே உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியை இழந்தது. மத்தியில் ஆட்சியைப் பிடிப்பதற்காக காங்கிரஸ் திட்டமிட்டு மின்னணு வாக்குப்பதிவு முறையை திணித்தது. இப்போது பாஜக அந்த இயந்திரங்களைப் பயன்படுத்தி மக்களவை, மாநிலங்களவைத் தேர்தல்களில் முறைகேடுகளைச் செய்கிறது. மீண்டும் வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தி தேர்தல் நடத்தினால் காங்கிரஸூம், பாஜகவும் தோல்வி அடையும்.

கர்நாடக தேர்தலில் பாஜக ஜெய் பஜ்ரங் பலி என கோஷம் எழுப்புகிறது. காங்கிரஸ் மற்றொரு மத முழக்கத்தை எழுப்புகிறது. அரசியலில் மதம் கலக்கக் கூடாது. தேர்தலுக்கு மத சாயத்தை பூசுவதை ஏற்க முடியாது. மதம், சாதியின் பெயரால் மக்களை பிளவுப்படுத்தி, தவறாக வழிநடத்தக் கூடாது. தேர்தல் ஆதாயத்துக்காக பெரும் பணக்காரர்களை இரு கட்சிகளும் ஆதரிக்கின்றன. அவர்கள் கொடுக்கும் நன்கொடையிலே இரு கட்சிகளும் இயங்குகின்றன. ஆனால் பகுஜன் சமாஜ் கட்சி பணக்காரர்களின் நிதியில் இயங்கவில்லை. கட்சி ஊழியர்களின் நன்கொடையிலேயே இயங்குகிறது.

பாபாசாகேப் அம்பேத்கருக்கு பாரத் ரத்னா முன்னாள் வி.பி.சிங் தாமாக முன்வந்து வழங்கவில்லை. பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் கான்ஷிராம் விதித்த நிபந்தனையின் காரணமாகவே பாரத் ரத்னா விருது வழங்கினார்.

நாட்டின் நலித்த பிரிவினர் முன்னேற வேண்டுமானால் மீண்டும் பகுஜன் சமாஜ் ஆட்சி அமைய வேண்டும்

இவ்வாறு மாயாவதி தெரிவித்தார்.

தமிழக தலைவரின் குழந்தைக்கு பெயர் சூட்டிய மாயாவதி: பெங்களூருவில் தனியார் விடுதியில் தங்கியிருந்த மாயாவதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் பெண் குழந்தைக்கு சாவித்ரி பாய் என பெயர் சூட்டினார். மேலும் அந்த குழந்தையை முத்தமிட்டு ஆசீர்வதித்தார். பின்னர் ஆம்ஸ்ட்ராங், தன் மனைவியுடன் மாயாவதியிடம் ஆசிப் பெற்றார். புத்த பூர்ணிமா நாளில் பெகன்ஜி மாயாவதி மூலம் குழந்தைக்கு பெயர் சூட்டியது மகிழ்ச்சி அளிப்பதாக ஆம்ஸ்ட்ராங் தெரிவித்தார்

சாவித்ரிபாய் என்பது மகாராஷ்டிராவின் சமூக சீர்த்திருத்தவாதியான ஜோதிராவ் பூலேவின் மனைவி பெயராகும். அவர் 1846ல் பள்ளித் தொடங்கி பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களுக்கு கல்வி சேவை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE