இம்பால்: மணிப்பூரில் நடந்த கலவரங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் இம்பாலில் இன்று (சனிக்கிழமை) கடைகள், சந்தைகள் திறந்திருந்தன. நகரில் இயல்பு வாழ்க்கை மெதுவாகத் திரும்பி வருகிறது. ராணுவத்தினரின் உறுதியான நடவடிக்கையால் அமைதி திரும்பி வரும் நிலையில், சாலைகளில் வாகனங்கள் ஓடத் தொடங்கின. பாதுகாப்புக்காக ராணுவ வீரர்கள் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்தனர்,
54 பேர் உயிரிழப்பு: மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை நடந்து இரண்டு நாட்கள் கடந்துள்ள நிலையில், ராணுவத்தினரின் நடவடிக்கைகளால் மாநிலத்தில் சற்றே அமைதி திரும்பி வருகிறது. இந்தக் கலவரங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களில் 16 பேரின் உடல்கள் சுரசந்த்பூர் மாட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை பிணவறையிலும், 15 பேரின் உடல்கள் கிழக்கு இம்பாலில் உள்ள ஜவகர்லால் நேரு மருத்துவ அறிவியல் நிறுவனத்திலும் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மேற்கு இம்பால் மாவட்டத்தின் லாம்ப்லேயில் உள்ள பிராந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் 23 பேர் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
13,000 பேர் வெளியேற்றம்: இதற்கிடையில், வெள்ளிக்கிழமை இரவு சுரசந்த்பூர் மாவட்டத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில், ராணுவ வீரர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் நடந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "சுரச்சந்த்பூர் மாவட்டத்தில் ராணுவத்தினருக்கும் கலவரக்காரர்களுக்கும் இடையில் நடந்த மோதலில் 4 போராட்டக்காரர்கள் உயிரிழந்தனர். டோர்பங் என்ற இடத்தில் ராணுவ வீரர்களை நோக்கி கலவரக்காரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் போராட்டக்காரர் ஒருவர் கொல்லப்பட்டார்" என்று தெரிவித்தனர்.
» பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் - வழக்கை விரைந்து விசாரிக்க நீதிமன்றம் ஒப்புதல்
ராணுவத் தகவல் தொடர்பு அதிகாரி வெள்ளிக்கிழமை இரவு கூறுகையில், "சுரந்த்பூர், மோரே, காக்சிங், காங்க்போக்பி பகுதிகள் ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் இருந்து 13,000 பேர் வெளியேற்றப்பட்டு ராணுவ முகாம்கள், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 12 மணி நேரத்தில் இம்பாலின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளின் சில இடங்களில் தீவைப்புச் சம்பவங்கள் மற்றும் முற்றுகைகள் நடத்த கலவரக்காரர்கள் முயன்றனர், ராணுவத்தினரின் உடனடியான எதிர்நடவடிக்கைகளால் அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இரண்டு சமூகங்களுக்கும் இடையில் நடந்த இந்த வன்முறையில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், கிட்டத்தட்ட நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் போலீசார் இவைகளை உறுதிப்படுத்தவில்லை.
கூடுதல் படை வீரர்கள் அனுப்பிவைப்பு: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநில முதல்வர் என். பிரேன் சிங் மற்றும் உயர் அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை பேசி மணிப்பூரின் அப்போதைய நிலைமை குறித்து தகவல் அறிந்துகொண்டு, ஆலோசனையும் நடத்தினார். மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக மத்திய அரசு கூடுதல் துணை ராணுவ வீரர்கள் மற்றும் கலவரத் தடுப்பு வாகனங்களை அனுப்பி வைத்தது. 1000 வீரர்கள் மற்றும் கலவரத் தடுப்பு வாகனங்கள் வெள்ளிக்கிழமை மணிப்பூர் சென்றடைந்தது.
முன்னதாக, மாநிலத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட வன்முறையை கட்டுப்படுத்த 10,000 ராணுவ வீரர்கள் மற்றும் அஸ்ஸாம் ரைஃபில் படை வீரர்கள் மாநிலம் முழுவதும் நிலை நிறுத்தப்பட்டனர். இந்த நிலையில். மணிப்பூரில் நிலைமை சரியாகும் வரையில் அம்மாநிலத்திற்கு செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்படுவதாக வடகிழக்கு எல்லை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
வன்முறை பின்னணி: மணிப்பூர் மாநிலத்தின் மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் இருக்கும் மேதே சமூக மக்களை பட்டியல் பழங்குடியினர் பிரிவில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை நடந்த பழங்குடியினர் அமைதி பேரணியில் இரு பிரிவினருக்கும் இடைய மோதல் ஏற்பட்டது. பின்னர் இது வன்முறையாக மாறி மாநிலம் முழுவதும் பரவியது. வன்முறையில் மணிப்பூர் மாநிலமே பற்றி எரிந்தது. வன்முறையைக் கட்டுப்படுத்த மாநில அரசு, ராணுவம் மற்றும் அஸ்ஸாம் ரைஃபில் படையினரை வரவழைத்தது. அதேநேரத்தில் மாநிலத்தின் 8 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இணைய சேவையும் முடக்கப்பட்டன. வன்முறையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவிடப்பட்டது. வன்முறையைக் கட்டுப்படுத்த ராணுவம் மற்றும் அஸ்ஸாம் ரைஃபில் படையினரின் கொடி அணிவகுப்புகள் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
23 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago