ஏஎல்ஹெச் துருவ் ஹெலிகாப்டர் பயன்பாடு நிறுத்தம் - ஜம்மு காஷ்மீர் விபத்தைத் தொடர்ந்து ராணுவம் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் வியாழக்கிழமை ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் வீரர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அட்வான்ஸ்டு லைட் ஹெலிகாப்டர் (ஏஎல்ஹெச்) துருவ் -ன் செயல்பாடுகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மலைப் பிரதேசமான கிஷ்த்வார் மாவட்டம் மார்வா பகுதியில் மச்னா கிராமத்தில் கடந்த 4ம் தேதி ராணுவத்துக்கு சொந்தமான ஏஎல்ஹெச் ஹெலிகாப்டர் ஒன்று தரையில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தின்போது விமானத்தில் மூன்று பேர் இருந்தனர். இந்த விபத்தில் தொழில்நுட்ப பிரிவினைச் சேர்ந்த வீரர் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு விமானிகள் காயமடைந்தனர். இந்த விபத்தினைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக ஏஎல்ஹெச் துருவ் -ன் செயல்பாடுகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக கடற்படையும், கடலோரக் காவல் படையும் இதேபோன்ற இரண்டு விபத்துக்கள் நிகழ்ந்ததன் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் ஏஎல்ஹெச் செயல்பாடுகளை நிறுத்தி வைத்திருந்தன. கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையில் துருவ் ஹெலிகாப்டர்கள் தொழில்நுட்ப சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், சோதனை நிறைவு பெற்ற ஹெலிகாப்டர்கள் தற்போது பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய விமானப்படையில் சுமார் 70 ஏஎல்ஹெச் துருவ் ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE