பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்கால தடை - வழக்கை விரைந்து விசாரிக்க மாநில அரசு மனு

By செய்திப்பிரிவு

பாட்னா: பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு பாட்னா உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி மாநில அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அம்மாநில அரசு முடிவெடுத்ததை அடுத்து, முதல்கட்ட கணக்கெடுப்பு கடந்த ஜனவரி 7ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடத்தப்பட்டது. இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு கடந்த ஏப்ரல் 15ம் தேதி தொடங்கியது. மே 15ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த கணக்கெடுப்புக்கு பாட்னா உயர்நீதிமன்றம் நேற்று (வியாழக்கிழமை) இடைக்கால தடை விதித்தது. தலைமை நீதிபதி கே.வி. சந்திரன் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. மேலும், வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பாட்னா உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு, பிஹார் அரசுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. வழக்கை திறம்பட நடத்தாததே இதற்குக் காரணம் என எதிர்க்கட்சியான பாஜக குற்றம் சாட்டியது. இந்நிலையில், இந்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரி அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அட்வகேட் ஜெனரல் பி.கே.ஷஹி, "இந்த வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ளோம். வழக்கை ஜூலை 3ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. எனினும், விரைவாக விசாரிக்க நாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளோம். இனி நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார். மேலும், "நீதிமன்றம் அளித்துள்ள இடைக்காலத் தீர்ப்பு விவரம் குறித்து ஆராய்ந்து வருகிறோம். அரசு என்ன செய்ய முடியுமோ அதனை செய்யும்" என்றும் அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE