கர்நாடகாவில் பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் இறுதிக்கட்ட பிரச்சாரம்: பெங்களூருவில் 40 கிமீ தூரம் சாலை பேரணி

By இரா.வினோத்


பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அம்மாநிலத்தில் 3 நாட்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரிக்கு முன்பு இருந்தே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அடுத்ததாக, கர்நாடகாவில் 3 நாட்கள் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கிறார். வெள்ளிக்கிழமை பிற்பகல் பெல்லாரியிலும், மாலை துமக்கூருவிலும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிர‌ச்சாரம் மேற்கொள்கிறார்.

சனிக்கிழமை காலை 10 மணியில் இருந்து பிற்பகல் 1.30 மணி வரை திறந்த வாகனத்தில் பெங்களூருவில் உள்ள திப்பசந்திராவில் இருந்து பிரிகேட் சாலை வரை பேரணியாக செல்கிறார். மாலை 4 மணிக்கு பாகல்கோட்டை மாவட்டம் பாதாமியிலும், இரவு 7 மணிக்கு ஹாவேரியிலும் பிரச்சார பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார்.

வரும் 7‍ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியில் இருந்து பிற்பகல் 1.30 மணிவரை பிரிகேட் சாலையில் இருந்து சாங்கி ஏரி சாலை வரை பேரணி மேற்கொள்கிறார். அன்றைய தினம் மாலை 4 மணிக்கு ஷிமோகாவிலும், இரவு 7 மணிக்கு மைசூருவில் உள்ள நஞ்சன்கூடுவிலும் மோடி பேசுகிறார்.

இந்த இரு தினங்களிலும் மோடி 36 கிமீ பேரணியாக செல்கிறார். அதன் மூலம் பெங்களூருவில் உள்ள 17 தொகுதி வாக்காளர்களையும் சந்திக்கிறார்.

இவ்வாறு ஷோபா கரந்தலாஜே தெரிவித்தார்.

முன்னதாக பிரதமர் நரேந்திர‌ மோடி பெங்களூருரு, மைசூரு, மண்டியா, ஹுப்ளி, குல்பர்கா ஆகிய இடங்களிலும் சாலை பேரணி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE