மணிப்பூர் வன்முறை | நிலைமை சரியாகும் வரை ரயில் சேவைகள் நிறுத்திவைப்பு

By செய்திப்பிரிவு

கவுகாத்தி: மணிப்பூர் மாநிலத்தில் மேதே சமூகத்தினருக்கும் பழங்குடியினருக்கும் இடையில் புதன்கிழமை ஏற்பட்ட கலவரம் காரணமாக அம்மாநிலத்திற்கு செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக வடகிழக்கு எல்லை ரயில்வே தெரிவித்துள்ளது.

அதேவேளையில், அண்டை மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து ஆகியவை மணிப்பூரில் வசிக்கும் தங்கள் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

மணிப்பூர் மாநிலத்தில் மேதே சமூகத்தினரை பட்டியல் பழங்குடியினர் பிரிவில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூர் பழங்குடியின மாணவர் சங்கம் சார்பில், 10 மலைப் பிரதேச மாவட்டங்களில் புதன்கிழமை நடந்த ‘பழங்குடியினர் ஒற்றுமைப் பேரணி’யில் மோதல் ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் பரவியதால், அண்டை மாவட்டங்களில் பதில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மேதே சமுதாயம் மற்றும் பழங்குடியின மக்களுக்கிடையே பல இடங்களில் ஏற்பட்ட மோதல், வன்முறையாக மாறியது.

மாநிலம் முழுவதும் ஏராளமான கடைகள், வீடுகள் சூறையாடப்பட்டு, தீ வைக்கப்பட்டன. தர்பங் பகுதியில் 3 மணி நேரத்துக்கும் மேலாக வன்முறை நீடித்தது. மாநில போலீஸாரால் வன்முறையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து, ராணுவம் மற்றும் அசாம் ரைஃபிள்ஸ் படையினர் உடனடியாக கலவரப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். போலீஸார் 9 ஆயிரம் பேரை மீட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைத்தனர். இந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்தின் பல்வேறு கல்வி நிலையங்களில் படிக்கும் மேகாலயா மணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றும்படி மாநில அரசு அதிகாரிகளுக்கு மேகாலயா முதல்வர் கன்ராட் கே சங்கம் உத்தரவிட்டுள்ளார்.

மணிப்பூரின் அண்டைமாநிலமான நாகாலாந்து மணிப்பூரில் உள்ள நாகாலாந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக உதவி எண்களை அறிவித்துள்ளது. மணிப்பூரின் சட்ட ஒழுங்கு பிரச்சினையும், மணிப்பூர் மற்றும் இம்பாலா நகரில் வசித்துவரும் நாகாலாந்து மக்களின் பாதுகாப்பு குறித்தும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருவதாக நாகாலாந்து அரசு தெரிவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை மணிப்பூர் செல்கிறார். முன்னதாக அவர், மணிப்பூர் மற்றும் அண்டை மாநில முதல்வர்கள், மாநில மற்றும் மத்திய அரசு உயர் அதிகாரிகளுடன் மாநிலத்தின் நிலையைக் குறித்து காணொளி வாயிலாக வியாழக்கிழமை ஆலேசானை நடத்தினார். இதனிடையில், பாஜக எம்எல்ஏ வுங்ஜாகின் வால்டே மாநில தலைமைச்செயலகத்தில் முதல்வருடன் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்திய பின்னர் இம்பாலாவில் உள்ள தனது வீட்டிற்கு வரும் வழியில் கலவரக்காரர்களால் தாக்கப்பட்டார். அதேபோல் அஸ்ஸாம் முதல்வர் ஹேமந்த பிஸ்வா, மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்-ஐ தொடர்பு கொண்டு மணிப்பூரில் அமைதி திரும்புவதற்கான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கு கூடுதல் படைபிரிவுகளை மத்திய அரசு மணிப்பூருக்கு அனுப்புகிறது. இந்த கூடுதல் படைப்பிரிவுகள் கவுகாத்தி மற்றும் தேஜ்பூர் விமானநிலையங்களுக்கு இந்திய விமானப்படை விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட ஆலோசகராக முன்னாள் சிஆப்பிஎஃப் தலைவர் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான குல்தீப் சிங்கை மணிப்பூர் அரசு நியமித்துள்ளது. அவர் இம்பாலா வந்தடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மணிப்பூர் வன்முறை குறித்து பல்வேறு தவறான தகவல்கள் பரப்பப்படுவதால், அதிகாரப்பூர்வ தகவல்களைத் தவிர மற்றவைகளை நம்ப வேண்டாம் என்று ராணுவ வீரர்களுக்கு தெரிவிக்ககப்பட்டுள்ளது.

கலவரத்தைக் கட்டுப்படுத்த மாநில அரசு வியாழக்கிழமை கலவரக்கார்களை கண்டதும் சுட உத்தரவிட்டிருந்தது. இந்த கலவரத்தால் பாதிக்கப்பட்ட 9 ஆயிரம் பேர் ராணுவம் மற்றும் துணை ராணுவப்படையினரால் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இறந்தவர்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE