எல்லையில் நிலைமை சீராக உள்ளது; பரஸ்பரம் மரியாதையுடன் நடப்போம் - ஷாங்காய் மாநாட்டில் சீன வெளியுறவு அமைச்சர் பேச்சு

By செய்திப்பிரிவு

கோவா: எல்லையில் தற்போதைய சூழலில் நிலைமை சீராக உள்ளதாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட சீன வெளியுறவு அமைச்சர் கின் கேங் தெரிவித்துள்ளார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் 2 நாள் மாநாடு இந்தியாவின் கோவாவில் நேற்று தொடங்கியது. இதில் சீன வெளியுறவு அமைச்சர் கின் கேங் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துக் கொண்டனர்.

அப்போது சீன வெளியுறவு அமைச்சர், "இந்திய - சீன எல்லையில் தற்போதைய சூழலில் நிலவரம் சீராக இருக்கிறது என்றும் இருப்பினும் அமைதியை நிலைநாட்ட தொடர்ந்து இருதரப்பும் ஒத்துழைக்க வேண்டும். இருதரப்பும் பரஸ்பரம் மரியாதை அளித்து, எல்லை உடன்படிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

வரலாற்றில் இருந்து படிப்பினைகளை கற்க வேண்டும், இருதரப்பு உறவுகளை நீண்ட கால கண்ணோட்டத்தில் அணுக வேண்டும், பரஸ்பரம் மரியாதை செய்ய வேண்டும். இணக்கமான சகவாழ்வு, அமைதியான வளர்ச்சிக்கு புதிய பாதையில் செல்ல வேண்டும். மேலும் நிலையான அமைதிக்கும், பதற்றங்களை குளிர்விப்பதற்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

கிழக்கு லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் இந்தியா, சீனாவுக்கு இடையே நீடித்துவரும் மோதல் போக்கிற்கு இடையே சீன வெளியுறவு அமைச்சர் இவ்வாறாக கூறியுள்ளார்.

அருணாச்சலப் பிரதேசத்திற்கு உரிமை கொண்டாடி வரும் சீனா, அதனை தன்னாட்சிப் பிராந்தியமான திபெத்தின் ஒரு அங்கம் எனக் கூறி வருகிறது. திபெத்தின் தெற்கில் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தின் ஜங்னன் பகுதியை சீனா ஜிஜாங் என குறிப்பிட்டுகிறது. இந்நிலையில், இந்த ஜங்னன் பகுதியைச் சேர்ந்த 11 இடங்களின் பெயர்களை சீன உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் மாற்றியது.

இதனால் எல்லைப் பிரச்சினை மீண்டும் பூதாகரமானது. இந்நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் சீன வெளியுறவு அமைச்சரின் பேச்சு கவனம் பெறுகிறது.

கடந்த 2001-ல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் ரஷ்யா, சீனா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஈரான், ஆப்கானிஸ்தான், பெலாரஸ், மங்கோலியா ஆகிய நாடுகள் பார்வையாளர்களாக உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE