உ.பி.யில் மீண்டும் என்கவுன்ட்டர்: கேங்ஸ்டர் அனில் துஜானா சுட்டுக் கொலை

By செய்திப்பிரிவு

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் அனில் துஜானா என்ற பிரபல கேங்ஸ்டர் என்கவுன்ட்டரில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மீரட் நகரில் உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப் படை இந்த என்கவுன்ட்டரை நிகழ்த்தியுள்ளது.

கொலை, கொள்ளை, பணம் பறிப்பு உள்பட அனில் துஜானா மீது 62 வழக்குகள் உள்ளன. இந்நிலையில், அனில் துஜானா இன்று (மே 4) போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இது தொடர்பாக வெளியாகியுள்ள முதல் கட்டத் தகவலின்படி, அனில் துஜானா கவுதம் புத் நகர், காசியாபாத், என்சிஆர் டெல்லி மற்றும் ஹரியாணாவில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர். இவர் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி தான் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார். வெளியே வந்தவுடன் கவுதம் புத் நகர் வழக்கில் தனக்கு எதிராக

அனில் துஜானா

சாட்சி சொல்லியவர்களை மிரட்டியுள்ளார். இதனையடுத்து இன்று அவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிகிறது.

யார் இந்த துஜானா? - உ.பி.யின் பிரபல கேங்ஸ்ட்ராக இறந்த நரேஷ் பாட்டியுடன் நெருங்கிய நட்பில் இருந்தார். நரேஷ் பாட்டியை சுந்தர் பாட்டி கொலை செய்ய இதற்கு அனில் துஜானா பலி தீர்த்தார். அதன் பின்னர் நரேஷ் இடத்திற்கு வந்த துஜானா அன்று தொடங்கி இதுவரை பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு போலீஸாருக்கு பெரும் சவாலாக இருந்து வந்தவராவார்.

ஏற்கெனவே கடந்த மாதம் கேங்ஸ்டர் அத்தீக் அகமதுவின் மகன் ஆசாத் அகமதுவும் அவரது கூட்டாளியும் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த மாதம் தொடங்கிய நிலையிலேயே ஒரு என்கவுன்ட்டர் நடந்துவிட்டது. கடந்த 2017 தொடங்கி இதுவரை 160-க்கும் மேற்பட்ட என்கவுன்ட்டர்கள் உ.பி.யில் நடந்துவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE