பிரிஜ் பூஷன் மீதான பாலியல் குற்றச்சாட்டு: மல்யுத்த வீராங்கனைகளின் வழக்கை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு கூறி மல்யுத்த வீராங்கனைகள் தாக்கல் செய்த மனு மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி உச்ச நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) வழக்கை முடித்து வைத்தது.

மல்யுத்த வீராங்கனைகள் 7 பேர், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு ஏப்.28-ம் தேதி தலைமை நீதிபதி டி.ஒ.ய் சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி காவல் துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை மே 4-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வீராங்கனைகளின் புகார் தொடர்பான விசாரணை ஒய்வு பெற்ற அல்லது பொறுப்பில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில் நடக்க வேண்டும் என்று வீராங்கனைகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாய்மொழியாக கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், "குற்றம்சாட்டப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும், மனுதாரர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளுடன் நீங்கள் இங்கு வந்தீர்கள். இரண்டு கோரிக்கைகளும் இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. வேறு ஏதாவது நிவாரணம் வேண்டும் என்றால் நீங்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தையோ அல்லது சம்பந்தப்பட்ட நீதித் துறை நீதிமன்றத்தையோ நாடுங்கள்" என்றார். இதனைத் தொடர்ந்து வழக்கை முடித்து வைப்பதாக நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.

முன்னதாக, விசாரணையின் போது டெல்லி காவல் துறை சார்பில் ஆஜரான சொலிஸ்டர் ஜெனரல் தூஷர் மேத்தா, உச்ச நீதிமன்றம் ஏப்.28-ம் தேதி வழங்கிய உத்தரவின் படி, மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மீது டெல்லி காவல் துறையில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு மைனர் உட்பட 7 வீராங்கனைகளுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். நீதிமன்றம் இதனை ஏற்றுக்கொண்டது.

பின்புலம்: பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்டோர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். இது தொடர்பாக பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்கள் கடந்த ஜனவரி மாதம் சாலையில் அமர்ந்து போராடினர். இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் தலையிட்ட மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தது.

இந்தக் குழு விசாரணை நடத்தி தனது அறிக்கையை கடந்த 5-ம் தேதி விளையாட்டுத்துறை அமைச்சகத்திடம் வழங்கியது. இதன் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த 23-ம் தேதி மீண்டும் போராட்டத்தை தொடங்கி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரிஜ் பூஷன் சரண் சிங் கைது செய்யப்படும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என்று டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே, "டெல்லி காவல் துறையினரால் துஷ்பிரயோகம் மற்றும் தவறான நடத்தைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், இந்திய அரசு தங்களுக்கு வழங்கிய விருதுகளால் எந்த பயனும் இல்லை" என்று ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர். | வாசிக்க > பதக்கங்கள், விருதுகளை திருப்பித் தர தயாராகும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள்: என்ன நடக்கிறது ஜந்தர் மந்தரில்?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE