வளர்ச்சி, அமைதிக்கு காங்கிரஸ் எதிரி: கர்நாடக பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு

By இரா.வினோத்


பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் அமைதி பறி போய்விடும். இந்த இரண்டுக்கும் காங்கிரஸ் எதிரி என பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள அங்கோலாவில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது மோடி பேசியதாவது:

கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் தொழில்துறையினர் முன்னேற்றம் அடைந்துள்ளனர். பெங்களூருவை அதிநவீன வளர்ச்சி நகரமாக பாஜக மாற்றியுள்ளது. மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சி இருப்பதால் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரட்டை என்ஜின் அரசின் நடவடிக்கையால் கர்நாடக முன்னேற்ற பாதையில் வேகமாக பயணிக்கிறது.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவின் வளர்ச்சி ரிவர்ஸ் கியரில் பின்னோக்கி போய்விடும். அந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் அமைதி, வளர்ச்சி ஆகிய இரண்டும் பறி போய்விடும். இந்த இரண்டுக்கும் காங்கிரஸ் எதிரி ஆகும். பஜ்ரங் தள அமைப்புக்கு தடை விதிப்பதாக கூறும் காங்கிரஸூக்கு தக்கப்பாடம் புகட்ட வேண்டும்.

காங்கிரஸூக்கு தேச விரோத சக்திகளுடன் கூட்டணி வைத்துள்ளது. தேர்தலில் அவர்கள் மூலம் ஆதாயம் அடைகிறது. அதனால் அவர்களுக்கு சாதகமான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. பாஜக ஆட்சியில் தேச விரோத சக்திகள் மீது போட்ட வழக்குகளை காங்கிரஸ் திரும்பப் பெற்றுள்ள‌து. பயங்கரவாத செயல்களை ஈடுபடுவோரை காப்பாற்ற முயற்சிக்கிறார்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி தெரித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE