குழந்தைகளுடன் பேசி, பத்ம விருதாளர்களிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி

By இரா.வினோத்


பெங்களூரு: கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு குழந்தைகளுடன் பேசுகையில், ''நீங்கள் பிரதராக வேண்டும்'' என உற்சாகப்படுத்தினார். அதேவேளையில் குழந்தைகளை கம்பி வேலிக்கு பின்னால் நிறுத்திப் பேசியது ஏன்? என காங்கிரஸ் வேள்வி எழுப்பியுள்ளது.

கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதால் பிரதமர் நரேந்திர மோடி சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று குல்பர்காவில் சென்ற அவர் பிரச்சாரத்துக்கு முன்பாக சாலையில் நின்றிருந்த குழந்தைகளுடன் ம‌கிழ்ச்சியோடு உரையாடினார். தன் கைவிரல்களில் வித்தைகளை செய்து காட்டி, குழந்தைகளை உற்சாகப்படுத்தினார்.

பின்னர் மோடி குழந்தைகளிடம், 'நீங்கள் என்ன ஆக விரும்புகிறீர்கள்?' எனக் கேட்டார். அதற்கு அங்கிருந்த குழந்தைகள், ''போலீஸ், மருத்துவர்''என ஒவ்வொருவராக‌ கூறினர். அப்போது ஒரு சிறுவன் ''நான் உங்களின் பாதுகாவலராக விரும்புகிறேன்'' எனக் கூறவே, மோடி ஆச்சரியம் அடைந்தார். அதற்கு பதிலளித்த மோடி, ''இல்லை..நீ பிரதமராக வேண்டும்''என உற்சாகப்படுத்தினார்.

இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதற்கு காங்கிரஸ் எம்எல்சி ரமேஷ்குமார், ''குழந்தைகளை மோடி கம்பி வேலிக்கு அந்த பக்கம் நிறுத்தி வைத்து பேசியுள்ளார். இது அவரது பாகுபாடு நிறைந்த மனநிலையை காட்டுகிறது. ஆனால் ராகுல் காந்தி எங்கு குழந்தைகளை அன்பாக அரவணைத்து பேசுகிறார்'' என விமர்சித்துள்ளார்.

பத்ம விருதாளர்களிடம் ஆசி: இதனிடையே அங்கோலாவில் பிரதமர் நரேந்திர மோடி சூழலியல் ஆர்வலர் துளசி கவுடா, பழங்குடியின ஆர்வலர் சுக்ரி பொம்மகவுடா ஆகியோரை சந்தித்து ஆசி பெற்றார். அவர்களிடம் வருகிற தேர்தலில் பாஜகவை ஆதரிக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும் டெல்லியில் தனது இல்லத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE