நாட்டின் வரலாற்றை மாற்ற முயல்கிறது பாஜக: நிதிஷ் குமார்

By செய்திப்பிரிவு

பாட்னா: நாட்டின் வரலாற்றை மாற்ற பாஜக முயல்வதாகவும், அதன் காரணமாகவே எதிரணியை ஒன்றிணைக்கும் பணியை தான் மேற்கொண்டு வருவதாகவும் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாட்டின் வரலாற்றை மாற்ற பாஜக முயல்கிறது. அதனைத் தடுத்து நிறுத்தவே எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியை நான் மேற்கொண்டு வருகிறேன். எனக்கு தனிப்பட்ட திட்டம் என்று எதுவுமில்லை. அனைவரின் நன்மையையும் கருத்தில் கொண்டே இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறேன். தனிப்பட்ட நலனுக்காக நான் எதையும் செய்ய மாட்டேன்" என தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில், கடந்த ஏப்ரல் 11-ம் தேதி டெல்லியில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரை நிதிஷ் குமார் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், இடதுசாரி தலைவர்கள் டி. ராஜா, சீதாராம் யெச்சூரி ஆகியோரைச் சந்தித்தார்.

கடந்த ஏப்ரல் 24-ம் தேதி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கொல்கத்தாவில் சந்தித்த நிதிஷ் குமார், பின்னர் உத்தரப்பிரதேச எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை லக்னோவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன் தொடர்ச்சியாக, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கையும், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனையும் நிதிஷ் குமார் நாளை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE