மணிப்பூர் | பழங்குடிகளின் போராட்டத்தில் வன்முறை; 5 நாட்கள் இணைய சேவை முடக்கம்

By செய்திப்பிரிவு

இம்பால்: மணிப்பூரில் மெய்தி சமூகத்தினரை பட்டியல் பழங்குடியினர் (எஸ்டி) பிரிவில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை நடந்த ‘பழங்குடியினர் அமைதி ஊர்வலத்தில்’ வன்முறை வெடித்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பல மாவட்டங்களில் ராணுவம் மற்றும் அஸ்ஸாம் ரைஃபில் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 5 நாட்களுக்கு இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் அதிகம் வசிக்கும் மெய்தி சமூகத்தினரை பட்டியல் பழங்குடியினர் பிரிவில் இணைப்பதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதனைத்தொடர்ந்து அரசின் இந்த முடிவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், புதன்கிழமை மணிப்பூர் அனைத்து மாணவர்கள் அமைப்பு (ஏடிஎஸ்யூஎம்) பழங்குடியினர் அமைதி ஊர்வலத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. அதேநேரத்தில் ஒருநாள் கடையடைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து மாநிலத்தில் உள்ள 10 மலை மாவட்டங்களில் புதன்கிழமை ஊர்வலம் நடைபெற்றது. அப்போது பழங்குடிகளுக்கும் பழங்குடிகள் அல்லாத பிரிவினருக்கும் இடையில் வன்முறை ஏற்பட்டது. பேரணியின் போது டோர்போங் பகுதியில் வன்முறை ஏற்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேபோல் மாநிலத்தின் பல மாவட்டங்களில் வன்முறை நிகழ்ந்துள்ளது.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளி வன்முறை நிகழ்ந்ததைத் தொடர்ந்து மாநில அரசு 5 நாட்களுக்கு இணையச்சேவையை முடக்க உத்தரவிட்டது. மேலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 114 தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கலவரத்தைக் கட்டுப்படுத்த ராணுவம் மற்றும் அஸ்ஸாம் ரைஃபில் படை வரவழைக்கப்பட்டது. படைவீரர்கள் வன்முறை பாதித்த கிராமங்களில் இருந்து 4000 பேரை மீட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலை நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பாதிக்கப்பட்ட பல இடங்களில் ராணுவம், ரைஃபில் படைகளின் கொடி அணிவகுப்பும் நடத்தப்பட்டது

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில்,"கலவரம் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து 4,000 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வீரர்களின் கொடி அணிவகுப்பும் நடத்தப்பட்டது" என்றார் .

இதற்கிடையில் குத்துச்சண்டை சாம்பியன் மேரி கோம் தனது ட்விட்டர் பதிவொன்றில், தனது மாநிலம் பற்றி எரிகிறது, அரசாங்கமும் ஊடகங்களும் உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE