‘வீதியில் போராடுவது ஒழுக்கமின்மை’ - விமர்சனத்திற்கு பின்னர் மல்யுத்த வீராங்கனைகளை சந்தித்த பி.டி.உஷா

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷனுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகளை இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா இன்று (புதன்கிழமை) சந்தித்தார்.

பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட 7 பேர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். இது தொடர்பாக பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகள் ஜந்தர் மந்தர் மைதானத்தில் தங்களின் போராட்டத்தை தொடர்ந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் போராட்டம் நடத்தி வரும் வீராங்கனைகளை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி. உஷா புதன்கிழமை ஜந்தர் மந்தருக்குச் சென்று சந்தித்தார். வீரர்களின் போராட்டம் குறித்து ‘வீதியில் போராடுவது ஒழுக்கமின்மை’என்று உஷா விமர்சித்த சில நாட்களுக்கு பின்னர் இந்த சந்திப்பு நிகழ்கிறது.

இந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொள்வதற்கு காலதாமதம் ஏற்படுவது குறித்து போராட்டத்தில் ஈடுப்பட்டிருக்கும் வீராங்கனைகள் செவ்வாய்க்கிழமை தங்களின் கோபத்தினை வெளிப்படுத்தி இருந்தனர்.

மேலும் அவர்கள், பி.டி. உஷா மற்றும் தடகள கூட்டமைப்பின் தலைவரும் பிரபல மல்யுத்த வீராங்கனையுமான மேரி கோம் ஆகியோர் தங்களைக் கைவிட்டு விட்டதாக தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர்.

முன்னதாக, கடந்த வாரத்தில் மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்திருந்த பி.டி.உஷா,"மல்யுத்த வீரர்கள் தெருக்களில் போராட்டம் நடத்துவது ஒழுக்கமின்மைக்கு சமம். அவர்கள் விசாரணைக் குழுவின் அறிக்கை வரும் வரைக்காவது காத்திருந்திருக்க வேண்டும். அவர்களின் செயல் விளையாட்டிற்கும் நாட்டிற்கும் நல்லதில்லை. இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்" என்று தெரிவித்திருந்தார்.

பி.டி. உஷாவின் இந்தக் கருத்துக்கு வீராங்கனைகள் கடுமையாக எதிர்வினையாற்றியிருந்தனர். பி.டி.உஷாவின் பேச்சு எங்களை மிகவும் காயப்படுத்தியுள்ளது. ஒரு பெண்ணாக இருந்தும் அவர் எங்களுக்கு ஆதரவளிக்கவில்லை. நாங்கள் என்ன ஒழுங்கீனத்தில் ஈடுபட்டோம். நாங்கள் அமைதியாக இங்கே அமர்ந்து போராடிக்கொண்டிருக்கிறோம். எங்களுக்கு நீதி கிடைத்திருந்தால் நாங்கள் இதைச் செய்திருக்க மாட்டோம்" என்று மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கூறியிருந்தார்.

"இந்தவிவகாரம் குறித்து பேச நாங்கள் பி.டி. உஷாவை அழைத்தோம். அவர் எங்கள் அழைப்பிற்கு பதில் அளிக்கவில்லை. அவர் ஏதாவது அழுத்தத்தில் இருக்கின்றாரா என்று தெரியவில்லை என்று" வினேஷ் போகத் தெரிவித்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE