பெங்களூர் சிறுமி பலாத்கார வழக்கு: ஸ்கேட்டிங் பயிற்றுநருக்கு போலீஸ் காவல்

பெங்களூர் தனியார் பள்ளியில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டிருக்கும் ஸ்கேட்டிங் பயிற்றுநர் முஸ்தபாவிற்கு 10 நாட்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.

கைதாகி இருக்கும் அவர், ஏற்கெனவே இரு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் என தற்போது தெரிய வந்துள்ளது.

பெங்களூரில் உள்ள மாரத்தள்ளி பகுதியில் இருக்கும் 'விப்ஜியார்' தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு 6-வயது சிறுமி,கடந்த 2-ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது குறித்து தகவலறிந்த சிறுமியின் பெற்றோர் கடந்த 15-ம் தேதி போலீஸில் புகார் அளித்தனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இவ்வழக்கில்,அப்பள்ளியின் ஸ்கேட்டிங் பயிற்றுநர் முஸ்தபா (எ) முன்னா (30) ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் திங்கள்கிழமை வர்தூர் போலீஸார் அவரை பெங்களூர் மாவட்ட 3-வது அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.அப்போது அவரை போலீஸ் காவலில் அனுப்ப வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டதால்,10 நாட்கள் போலீஸ் காவலில் விசா ரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து முஸ்தபாவை போலீஸார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கெனவே இரு மாணவிகள்

கைது செய்யப்பட்டிருக்கும் முஸ்தபா குறித்து காவல்துறை வட்டாரத்தில் கூறியதாவது:

“முஸ்தபா, வீட்டை சோதனை யிட்டதில் கைப்பற்றிய லேப்-டாப், செல்போன் ஆகியவற்றை ஆராய்ந்ததில், அவர் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.மேலும் அவர் முன்பு பணியாற்றிய ஒயிட் ஃபீல்ட் தனியார் பள்ளியில் விசாரணை நடத்தினோம். அப்போது முஸ்தபா 3-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை செய்ததால், பணியில் இருந்து விரட்ட‌ப்பட்டார். இது தொடர்பாக அந்த பள்ளியின் தாளாளர் போலீஸில் புகார் அளித்திருக்கிறார்.

இதேபோல அவரது வீட்டின் அருகே இருந்த 7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அக்கம்பக்கத்தில் கூறுகிறார்கள்.எனவே குற்றவாளியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.அதில் இன்னும் பல விஷயங்கள் தெரிய வரலாம்''என்றனர்.

பள்ளி உரிமம் ரத்து?

இதற்கிடையே 'விப்ஜியார்' பள்ளி நிர்வாகம் குற்றவாளியை பாதுகாக்க சதி செய்ததாக வர்த்தூர் போலீஸார்,பள்ளியின் நிர்வாகத்தின் மீது திங்கள்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளனர்.மேலும் பள்ளியின் செயல்பாடு குறித்து கர்நாடக உயர் கல்வி அமைச்சர் கிம்மனே ரத்னாகர் அப்பள்ளி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

ஏற்கெனவே விப்ஜியார் பள்ளியின் ஒழுங்கீனத்தை காரணம் காட்டி, அதன் உரிமத்தை ரத்து செய்யும்படி டெல்லியில் உள்ள ஐ.சி.எஸ்.இ. (கல்வித் துறை) தலைமையகத்திற்கு கர்நாடக அரசு பரிந்துரை கடிதம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE