முடங்கிய நிலையில் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கம்!

By செய்திப்பிரிவு

சென்னை: ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கம் முடங்கிய நிலையில் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ட்விட்டர் தளத்தின் சார்பில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் பிரதான ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ட்விட்டர் தளத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் பக்கம் முடக்கப்பட்டதாக ட்விட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவின் மிகப் பெரிய செய்தி நிறுவனங்களில் ஒன்றான ஏஎன்ஐ-யின் ட்விட்டர் பக்கத்தை, ட்விட்டர் நிர்வாகம் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் முடக்கியது. இது தொடர்பாக ஏஎன்ஐ-க்கு, ட்விட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலில், "ட்விட்டர் கணக்கை தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 13 வயதாகி இருக்க வேண்டும். இதில் ட்விட்டர் நிறுவனம் உறுதியாக உள்ளது. இந்த விதியை மீறும் வகையில் உங்கள் கணக்கு இருப்பதால், அது முடக்கப்படுகிறது. பின்னர் உங்கள் கணக்கு டெலிட் செய்யப்படும்" என தெரிவித்தது.

இது குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் ஸ்மிதா பிரகாஷ், ட்விட்டர் நிறுவனத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், "76 லட்சம் பின்தொடர்பவர்களைக் கொண்ட ஏஎன்ஐ ட்விட்டர் பக்கத்தை ட்விட்டர் முடக்கி இருக்கிறது. முதலில் எங்கள் கணக்குக்கு இருந்த கோல்டன் டிக் எடுக்கப்பட்டது. பிறகு நீல நிற டிக் கொடுக்கப்பட்டது. தற்போது அதுவும் முடக்கப்பட்டு விட்டது. நாங்கள் 13 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் அல்ல. எங்கள் கணக்கை மீண்டும் எங்களுக்கு தயவு செய்து அளியுங்கள்" என தெரிவித்தார்.

சுமார் 300 நிமிடங்கள் வரையில் ஏஎன்ஐ நிறுவனத்தின் ட்விட்டர் பக்கம் முடங்கி இருந்தது. இந்த இடைப்பட்ட நேரத்தில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் இதர ட்விட்டர் ஹேண்டில்களில் பகிரப்பட்டன. இந்த சூழலில் தற்போது மீண்டும் ஏஎன்ஐ நிறுவனத்தின் ட்விட்டர் பக்கம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE