டெல்லி பல்கலை. நூற்றாண்டு விழா: திருவள்ளுவர் படத்துடன் கூடிய நாட்காட்டி வெளியீடு

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: டெல்லி பல்கலைகழக நூற்றாண்டை ஒட்டி வெளியிடப்பட்ட நாட்காட்டியில் திருவள்ளுவர் பற்றியும் ஒருபக்கம் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம், திருக்குறள் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

உலகின் பெருமைமிகு பல்கலைக்கழகங்களில் ஒன்றாக டெல்லிப் பல்கலைக்கழகம் விளங்குகிறது. மத்தியப் பல்கலைக்கழகங்களில் ஒன்றான இதில், பட்டம் பயின்ற மாணவர்கள் பன்முகத்திறன் கொண்டவர்களாக உருவாகியுள்ளனர். இத்தகைய சிறப்புமிக்க டெல்லிப் பல்கலைகழகம் தனது கல்விப் பணியில் ஒரு நூற்றாண்டை நிறைவு செய்துள்ளது. இச்சிறப்பை பறைசாற்றி மகிழ பல்கலைக்கழகத்தின் சார்பில் பஞ்சாங்க நாட்காட்டி ஒன்று வெளியாகி உள்ளது.

இந்த நாட்காட்டியின் ஒரு பக்கத்தில் தமிழ்ப்புலவர் திருவள்ளுவர் உருவப் படமும் திருக்குறளின் கல்வி அதிகாரம் குறித்த கருத்துகளும் வெளியாகி உள்ளன. இதன்மூலம், வட மாநிலப் பகுதிகளில் தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது.இந்த நாட்காட்டியை உருவாக்கும் பணியினை டெல்லிப் பல்கலைக்கழக இந்தித் துறையின் தலைவரான பேராசிரியர் நிரஞ்சன் மேற்கொண்டார். சனிக்கிழமை மாலை இந்த நாட்காட்டி வெளியீட்டு விழா சிறப்பான முறையில் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

இது குறித்து இந்து தமிழ் திசை இணையத்திடம் இந்தி மொழித்துறையின் தலைவரான நிரஞ்சன் கூறியது: "எங்கள் பல்கலைகழகத்தின் சகப் பேராசிரியரான தி.உமாதேவி, திருக்குறள் குறித்த இந்தி மொழிபெயர்ப்பு நூலினை அண்மையில் எனக்கு வழங்கினார்.அதனை முழுமையாகப் படித்து நான் இன்புற்றேன் என்றும், உலக மக்கள் ஒவ்வொருவரும் படித்து பயனடைய வேண்டிய அரியநூல் திருக்குறள் என்பதை உணர்ந்தேன். எனவே, திருக்குறளின் கல்வி குறித்த கருத்துகள் நமது பெருமைமிகு பல்கலைக்கழக சிறப்பு பஞ்சாங்க நாட்காட்டியில் வெளியிடப்பட்டது" எனத் தெரிவித்தார்.

டெல்லி பல்கலைகழகத்தின் தமிழ் பேராசிரியரான உமாதேவி, கருத்தரங்கம் நடத்தியும், நூல்கள் கொடுத்தும் தமிழ் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வழக்கம் உடையவர். இவர், சமீபத்தில் டெல்லியின் பிறமொழி மாணவர்களை சென்னைக்கு அழைத்து வந்திருந்தார். இவர்கள், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தமிழ் மொழி விழிப்புணர்விற்கானத் திட்டத்தில் கீழ் சென்னையில் 15 நாட்கள் தங்க வைக்கப்பட்டனர். இதுபோல், டெல்லி பல்கலைகழக நூற்றாண்டிற்கானப் பஞ்சாங்க நாட்காட்டியின் வழியாகவும் தமிழின் திருக்குறள் குறித்த விழிப்புணர்வும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE