டெல்லி மெட்ரோவில் ஆபாசமாக நடந்துகொண்டவர் மீது வழக்குப் பதிவு: வைரல் வீடியோவால் போலீஸ் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மெட்ரோ ரயிலில் இளைஞர் ஒருவர் சுய இன்ப நடவடிக்கையில் ஈடுபடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அது குறித்து டெல்லி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, இந்த ஒழுங்கீனச் செயல் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர், டெல்லி போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

சமூக வலைதளங்களில் இளைஞர் ஒருவரின் வீடியோ ஒன்று வைரலானது. டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் அந்த இளைஞர் ரயில் பயணத்தின்போது சுய இன்ப நடவடிக்கையில் (தன்னுடைய மொபைல் போனில் ஏதோ ஒன்றை பார்த்தபடி) ஈடுபடுகிறார். இதனால் அவருக்கு அருகில் இருக்கும் சக பயணிகள் முகம் சுளித்தபடி விலகிச் செல்கின்றனர். இந்தச் செயல்களை மற்றொரு நபர் வீடியோவாக எடுத்துள்ளார்.

இந்த வீடியோ குறித்து டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி, ஸ்வாதி மலிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், "டெல்லி மெட்ரோ ரயிலில் இளைஞர் ஒருவர் வெட்கமின்றி சுய இன்ப நடவடிக்கையில் ஈடுபடும் வீடியோ ஒன்று வைரலானது. இது அருவருக்கத்தக்கச் செயலாகும். இந்த அநாகரிக செயல் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி, டெல்லி போலீஸார் மற்றும் மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். டெல்லி மெட்ரோ ரயிலில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது அதிகரித்து வருகின்றது. இதுபோன்ற நபர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்போதுதான் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து டெல்லி மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "போலீசார் தாமாக முன்வந்து, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 294 (ஆபாசமாக நடந்து கொள்வது, பாடுவது)-ன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. அந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்று தெரிவித்தார்.

டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மெட்ரோவில் பயணம் செய்யும் போது பயணிகள் கண்ணியத்துடன் நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். பயணத்தின் போது அநாகரிகமான செயல்களை பயணிகள் யாராவது பார்த்தால் அதுகுறித்து உடனடியாக மெட்ரோ ரயிலின் உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டு, நடைமேடை, ரயில் நிலையம், நேரம் போன்ற தகவல்களுடன் புகார் தெரிவிக்கலாம். இதுபோன்ற நடவடிக்கைகளைக் கண்காணிக்க, மெட்ரோ மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் அடங்கிய பறக்கும் படைகளின் எண்ணிக்கை அதிகப்படுத்த தேவையான நடவடிக்கைகள் உரிய சட்டவிதிகளின் படி எடுக்கப்படும்"என்று தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE