‘விஷப் பாம்பு’ என விமர்சித்த விவகாரம் | வாக்குகள் மூலம் காங்கிரஸுக்கு மக்கள் பதிலடி தருவர்: பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

ஹம்னாபாத் (கர்நாடகா): காங்கிரஸ் தலைவர்களின் கடும் விமர்சனங்களுக்கு வாக்குகள் மூலம் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அம்மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். பிதார் மாவட்டத்தின் ஹம்னாபாத் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை விவரம்: "நாட்டின் வளர்ச்சிக்காகவும், கர்நாடகத்தின் வளர்ச்சிக்காகவும் பாஜக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் இருப்பதால் கர்நாடகா வேகமாக வளர்ந்து வருகிறது. இரட்டை இன்ஜின் ஆட்சி, கர்நாடகாவுக்கு ஏராளமான நன்மைகளை அளித்துள்ளது. இது தொடர வேண்டும்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே என்னை ‘விஷப் பாம்பு’ என விமர்சித்துள்ளார். காங்கிரஸ் தலைவர்கள் என்னைக் கடுமையாக திட்டுவது இது முதல்முறை அல்ல. இதுவரை 91 முறை அவர்கள் என்னைக் கடுமையான வார்த்தைகளால் திட்டி இருக்கிறார்கள். என்னை திருடன் என்றார்கள்; தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தவன் என்றார்கள்; நான் சார்ந்த ஓபிசி சமூகத்தையே திருடன் என்றார்கள். அதுமட்டுமல்ல, கர்நாடகாவின் லிங்காயத் சமூகத்தையும் திருடர்கள் என விமர்சித்தார்கள்.

அவர்கள் என்னை மட்டும் விமர்சிக்கவில்லை. இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பியான அம்பேத்கரையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. மாபெரும் தலைவரான அவரை, ராட்சசன் என்றார்கள்; துரோகி என்றார்கள்; மோசடி பேர்வழி என்றார்கள். நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தலைவரான வீர சாவர்க்கரை எவ்வாறு அவர்கள் பழித்து வருகிறார்கள் என்பதை தற்போதும் பார்க்கிறோம். நாட்டின் மாபெரும் தலைவர்கள் பலர், காங்கிரஸின் பழிச் சொல்லுக்கு ஆளாகி இருக்கிறார்கள். காங்கிரஸால் தாக்கப்பட்ட அத்தகைய மாபெரும் தலைவர்களின் வரிசையில் நானும் இருப்பதை எண்ணி பெருமைப்படுகிறேன். இதை வெகுமதியாகவே கருதுகிறேன்.

காங்கிரஸ் தலைவர்களுக்கு நான் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். நான் கூறுவதை அவர்கள் காது கொடுத்துக் கேட்க வேண்டும். எப்போதெல்லாம் நீங்கள் மற்றவர்களை கடுமையாக திட்டுகிறீர்களோ அப்போதெல்லாம் எழுந்திருக்க முடியாத அளவுக்கு மக்கள் உங்களை தண்டித்திருக்கிறார்கள். இந்த முறையும், நீங்கள் திட்டியதற்கான பதிலடியை மக்கள் வாக்குகள் மூலம் உங்களுக்கு தருவார்கள்.

மற்றவர்களை எப்படியெல்லாம் விமர்சிக்கலாம் என்பதற்கான வார்த்தைகளை அகராதியில் தேடித் தேடி காங்கிரஸ் தனது நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறது. அதற்குப் பதிலாக நல்லாட்சியை கொடுத்திருந்தால், அதன்மூலம் தனது தொண்டர்களை உற்சாகப்படுத்தி இருந்தால், அதற்கு தற்போதைய துயர நிலை ஏற்பட்டிருக்காது. நான் மக்களுக்காக தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கிறேன். காங்கிரஸ் என்னை தொடர்ந்து விமர்சித்துக் கொண்டிருக்கிறது. அவர்களின் விமர்சனம், உங்களின் ஆசீர்வாதத்தால் தூசியாகிவிடுகிறது" என்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

மேலும்