காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு உதவிய 6 பேர் கைது

By செய்திப்பிரிவு

ரஜவுரி: காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் கடந்த 20-ம் தேதி நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் தீவிரவாதிகளுக்கு உதவிய உள்ளூர் நபர்கள் 6 பேரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து டிஜிபி தில்பக் நேற்று கூறியதாவது:

ராணுவ வாகனத்தின் மீது 3 முதல் 5 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகளுக்கு உதவியதாக 6 பேரை கைது செய்துள்ளோம். இவர்கள் தீவிரவாதிகளுக்கு 3 மாதங்களாக உணவு, தங்குமிடம் கொடுத்து வழிகாட்டியுள்ளனர். ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் மூலம் வந்துள்ளன. அதை உள்ளூர் நபர்கள் எடுத்து, தீவிரவாதிகளிடம் கொடுத்துள்ளனர். காடுகளுக்கு அருகில் உள்ள இடங்களை, தாக்குதல் நடத்துவதற்கு தீவிரவாதிகள் தேர்வு செய்கின்றனர். அங்கு அவர்களுக்கு உள்ளூர் மக்கள் ஆதரவு கிடைக்கிறது, தப்பிச் செல்ல வழி இருக்கிறது.

பூஞ்ச் பகுதியைச் சேர்ந்த நிசார் என்பவர் கடந்த 1990-ம் ஆண்டு முதல், பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் கமாண்டர் உத்தரவுப்படி செயல்படுகிறார். அவரை கைது செய்து விசாரித்து வருகிறோம். நன்கு திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். ராணுவ வாகனத்துக்கு மிக அருகில் வந்து தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் வீரர்கள் காயமடைந்த பின்பு, சக்தி வாய்ந்த வெடிகுண்டை வாகனத்தில் வைத்து வெடிக்கச் செய்துள்ளனர். தாக்குதல் நடத்தும் பகுதிகளில் தீவிரவாதிகள் பல மாதங்களாக தங்கி நோட்டமிடுகின்றனர். இதற்கு முன்பு பல தீவிரவாதிகளை நாங்கள் சுட்டுக் கொன்றுள்ளோம். இவ்வாறு டிஜிபி தில்பக் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE