புதுடெல்லி: பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்டோர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். இதுதொடர்பாக பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்கள் கடந்த ஜனவரி மாதம் சாலையில் அமர்ந்து போராடினர். இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் தலையிட்ட மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தது.
இந்த குழு விசாரணை நடத்தி தனது அறிக்கையை கடந்த 5-ம் தேதி விளையாட்டுத்துறை அமைச்சகத்திடம் வழங்கியது. இதன் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. மேலும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வீராங்கனைகள் டெல்லி காவல் நிலையத்தில் அளித்த புகார் தொடர்பாகவும் எந்தவித மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை கண்டித்தும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கடந்த 23-ம் தேதி மீண்டும் போராட்டத்தை தொடங்கினர் மல்யுத்த வீராங்கனைகள்.
டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தத் போராட்டத்தில் வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த போராட்டம் 6-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.
இதனிடையே மல்யுத்த வீராங்கனைகள் 7 பேர், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி காவல்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை மே 4-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்சி மாலிக் கூறும்போது, “இது எங்களது வெற்றிக்கான முதல்படி. ஆனாலும் எங்களது போராட்டம் தொடரும்” என்றார்.
மற்றொரு மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் கூறும்போது, “டெல்லி காவல் துறையினர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது தளர்வான எஃப்ஐஆர் பதிவு செய்யலாம். இந்த விஷயத்தில் மேற்கொண்டு என்ன நடைபெறுகிறது என்பதை பொறுத்திருந்து கவனிப்போம். அதன் பின்னரே போராட்டத்தை கைவிடுவது தொடர்பாக முடிவு செய்வோம். பிரிஜ் பூஷன் சரண் சிங் ஜெயில் கம்பிகளுக்குப் பின்னால் இருக்க வேண்டும்.அவர் வகிக்கும் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்பட வேண்டும், இல்லையெனில் அவர், காவல்துறையின் விசாரணையில் செல்வாக்கு செலுத்த முயற்சிப்பார்” என்றார்.
இதற்கிடையே மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்துக்கு விளையாட்டுத்துறை பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ், முன்னாள் கிரிக்கெட் வீரர்களான வீரேந்திர சேவக், இர்பான் பதான், ஹர்பஜன் சிங், குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீன், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா உள்ளிட்டோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
43 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago